Link to home pageLanguagesLink to all Bible versions on this site
10
யெகோவா யூதாவை ஆதரிப்பார்
1 யூதா மக்களே, யெகோவாவிடம் வசந்தகாலத்தில் மழைக்காக மன்றாடுங்கள்;
யெகோவாவே மழைமேகங்களை உண்டாக்குகிறவர்.
அவர் மனிதர்களுக்கு மழையைப் பொழியச்செய்து,
அனைவருக்காகவும் வயலின் பயிர்களை விளையச் செய்கிறவர்.
2 விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன.
குறிசொல்கிறவர்கள் பொய்யான காட்சிகளைக் காண்கிறார்கள்.
உண்மையற்ற கனவுகளைக் கூறுகிறார்கள்.
அவர்கள் கொடுக்கும் ஆறுதலும் பயனற்றது.
ஆகவே மக்கள் செம்மறியாடுகளைப்போல் வழிதப்பி,
மேய்ப்பன் இல்லாதபடியால் ஒடுக்கப்படுகிறார்கள்.
 
3 “மேய்ப்பர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது,
தலைவர்களை நான் தண்டிப்பேன்;
சேனைகளின் யெகோவா,
யூதா குடும்பத்தாராகிய தமது மந்தையைப் பராமரிப்பார்,
அவர்களை யுத்த களத்தின் கம்பீரமான குதிரையைப் போலாக்குவார்.
4 மூலைக்கல்லும் கூடாரத்திற்கான முளையும்,
யுத்த வில்லும்,
யூதாவிலிருந்தே தோன்றும்.
யூதாவிலிருந்தே எல்லா ஆளுநர்களும் தோன்றுவார்கள்.
5 யுத்தத்தில் வீதிகளின் சேற்றில் எதிரியை மிதிக்கும் வலிமையான மனிதர்போல்,
அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பார்கள்.
யெகோவா அவர்களோடிருப்பதால் அவர்கள் போரிட்டு,
குதிரைவீரரையும் முறியடிப்பார்கள்.
 
6 “நான் யூதா குடும்பத்தாரைப் பெலப்படுத்துவேன்.
யோசேப்பு குடும்பத்தாரைக் காப்பாற்றுவேன்.
நான் அவர்கள்மேல் இரக்கங்கொண்டபடியால்,
நான் அவர்களை
முந்திய நிலைக்குக் கொண்டுவருவேன்.
அவர்கள் என்னால் புறக்கணிக்கப்படாதவர்கள்போல் இருப்பார்கள்.
ஏனெனில் அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே.
நான் அவர்களின் வேண்டுதலுக்கு விடையளிப்பேன்.
7 எப்பிராயீமியர் வலிமைமிக்க மனிதரைப் போலாவார்கள்.
திராட்சை இரசம் குடித்தவர்களைப்போல் அவர்கள் உள்ளத்தில் மகிழ்வார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் அதைக்கண்டு களிகூருவார்கள்;
அவர்களின் உள்ளம் யெகோவாவிடம் மகிழும்.
8 நான் சைகை காட்டி
அவர்களை ஒன்றுகூட்டுவேன்.
நிச்சயமாய் நான் அவர்களை மீட்பேன்.
அவர்கள் முன்போல் எண்ணற்றவர்களாய் இருப்பார்கள்.
9 மக்கள் கூட்டங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும்,
தூரதேசங்களிலும் இன்னும் அவர்கள் என்னை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் தப்பிப் பிழைப்பார்கள்.
அவர்கள் திரும்பி வருவார்கள்.
10 அவர்களை நான் எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து,
அசீரியாவிலிருந்த அவர்களை ஒன்றுகூட்டி,
கீலேயாத், லெபனோன் நாடுகளுக்குக் கொண்டுவருவேன்.
அவர்களுக்கு அங்கே போதுமான இடம் இருக்காது.
11 தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்வார்கள்;
ஏனெனில் கொந்தளிக்கும் கடல் அமைதியாக்கப்படும்.
நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்;
அசீரியாவின் அகந்தை தாழ்த்தப்படும்.
எகிப்தின் செங்கோலும் அதைவிட்டு எடுபடும்.
12 நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்”
அவருடைய பெயரில் அவர்கள் நடப்பார்கள்
என்று யெகோவா அறிவிக்கிறார்.