Link to home pageLanguagesLink to all Bible versions on this site
2
காதலி
1 நான்[a] சாரோனின் ரோஜாவும்[b],
பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன்.
காதலன்
2 முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல்
கன்னியர் நடுவில் என் காதலியும் இருக்கிறாள்.
காதலி
3 காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல்,
வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார்.
அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன்,
அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது.
4 அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்;
என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது.
5 உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள்,
ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள்,
ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன்.
6 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது,
அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
7 எருசலேமின் மங்கையரே,
கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை!
காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,
அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
 
8 கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது!
இதோ, என் காதலர் வந்துவிட்டார்!
மலைகளைத் தாண்டியும்,
குன்றுகள்மேல் தாவியும் வருகிறார்.
9 என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்.
இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார்,
ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார்,
கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார்.
10 என் காதலர் என்னோடு பேசி,
“என் அன்பே, எழுந்திரு,
என் அழகே, என்னோடு வா.
11 இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12 பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன;
பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது,
காட்டுப்புறா கூவும்
சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது.
13 அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன;
திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன.
என் அன்பே, எழுந்து வா;
என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.
காதலன்
14 பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே,
கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே,
உன் முகத்தை எனக்குக் காட்டு,
உனது குரலை நான் கேட்கட்டும்;
உன் குரல் இனிமையானது,
உன் முகம் அழகானது.
15 நம்முடைய திராட்சைத் தோட்டங்கள்
பூத்திருக்கின்றன,
அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும்
குள்ளநரிகளையும்[c] நமக்காகப் பிடியுங்கள்.
காதலி
16 என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்;
அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
17 என் காதலரே, பொழுது விடிவதற்குள்,
நிழல்கள் மறைவதற்குள்
திரும்பி வாரும்,
குன்றுகளில் உள்ள மானைப்போலவும்,
மரைக்குட்டியைப் போலவும்
திரும்பி வாரும்.