Link to home pageLanguagesLink to all Bible versions on this site
3
சூடடிக்கும் களத்தில் ரூத்தும், போவாஸும்
1 ஒரு நாள் ரூத்தின் மாமியாராகிய நகோமி அவளிடம், “என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு ஒரு வாழ்க்கையைத் தேட வேண்டுமல்லவா? 2 போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான். 3 எனவே நீ குளித்து வாசனைத் தைலம் பூசி, உன்னிடத்திலுள்ள சிறந்த உடையை உடுத்திக்கொள். பின் நீ அந்த களத்திற்குப்போ. ஆனால் அவன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரை நீ அங்கிருப்பது அவனுக்குத் தெரியாதிருக்கட்டும். 4 அவன் படுத்திருக்கிறபோது அவன் படுக்கும் இடத்தைக் கவனித்துக்கொள். அவன் படுத்தபின் நீ போய் போர்வையை விலக்கி அவன் கால்மாட்டில் படுத்துக்கொள்; பின்பு நீ என்ன செய்யவேண்டும் என்று அவனே உனக்குச் சொல்வான்” என்றாள்.

5 அதற்கு ரூத், “நீங்கள் எனக்குச் சொல்கிறபடி எல்லாம் நான் செய்வேன்” என்று சொன்னாள். 6 அவ்வாறே அவள் சூடடிக்கும் களத்திற்குப் போய் தன் மாமியார் செய்யும்படி சொன்ன எல்லாவற்றையும் செய்தாள்.

7 போவாஸ் சாப்பிட்டு, குடித்து மிக மகிழ்ச்சியாயிருந்தான். அவன், தானியம் குவிந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் போய்ப்படுத்தான். அப்பொழுது ரூத் மெதுவாக அவனருகே போய் போர்வையை விலக்கி கால்மாட்டில் படுத்துக்கொண்டாள். 8 நள்ளிரவில் ஏதோ ஒன்று அவனைத் திடுக்குறச் செய்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது, ஒரு பெண் தன் கால்மாட்டில் படுத்திருப்பதைக் கண்டான்.

9 உடனே அவன், “நீ யார்?” எனக் கேட்டான்.

“நான் உங்கள் அடியாளாகிய ரூத்; நீங்களே என்னை மீட்கும் உரிமையுடைய உறவினன்; ஆகையால் உங்கள் போர்வையின் தொங்கலை என்மேல் விரியுங்கள்”[a] என்றாள்.

10 அதற்கு அவன், “என் மகளே! உன்னை யெகோவா ஆசீர்வதிப்பாராக. நீ முன்பு காட்டிய தயவைவிட இப்போது காட்டும் தயவு மிகமேலானது. நீ பணக்கார வாலிபனையோ, ஏழை வாலிபனையோ நாடிப்போகவில்லை. 11 இப்பொழுதும் என் மகளே நீ பயப்படவேண்டாம். நீ கேட்பதெல்லாவற்றையும் நான் செய்வேன். நீ ஒரு உயர்ந்த குணாதிசயமுடையவள் என்பதை பட்டணத்திலுள்ள என் மக்களெல்லாரும் அறிவார்கள். 12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பது உண்மைதான். ஆனாலும், என்னைவிட அதிக மீட்கும் உரிமையுடைய உறவினன் ஒருவன் இருக்கிறான். 13 இன்றிரவு நீ இங்கே தங்கியிரு. காலையில் அவன் உன்னை மீட்க விரும்பினால் நல்லது. அவன் உன்னை மீட்கட்டும். அவன் விரும்பாவிட்டால் யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் உன்னை மீட்பேன் என்பதும் நிச்சயம். ஆகவே காலைவரை நீ இங்கே படுத்திரு” என்றான்.

14 காலைவரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். ஆனால் ஒருவரையொருவர் கண்டுகொள்ளத்தக்க வெளிச்சம் வரும்முன் அவள் படுக்கையை விட்டெழுந்தாள். ஏனெனில் போவாஸ், “சூடடிக்கும் களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்” என்று சொல்லியிருந்தான்.

15 மீண்டும் அவன் அவளிடம், “நீ உன் போர்வையைக் கொண்டுவந்து விரித்துப் பிடி” என்றான். அவள் அப்படியே விரித்துப்பிடிக்க அவன் அதில் ஆறுபடி[b] வாற்கோதுமையை அளந்து அவளிடம் கொடுத்தான்; பின்பு அவன்[c] பட்டணத்திற்குத் திரும்பிப்போனான்.

16 ரூத் தன் மாமியார் நகோமியிடம் வந்தபோது, அவள் மாமியார், “என் மகளே, நீ போனகாரியம் என்னவாயிற்று” என்று கேட்டாள்.

அப்பொழுது அவள், போவாஸ் தனக்கு செய்ததெல்லாவற்றையும் சொன்னாள். 17 அவள் தொடர்ந்து, “நீ உன் மாமியாரிடம் வெறுங்கையுடன் போகவேண்டாம் என்று சொல்லி, அவர் எனக்கு இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் தந்தார்” என்றாள்.

18 அப்பொழுது நகோமி, “என் மகளே! இது என்னவாக முடியும் என்று அறியும்வரை காத்திரு. அந்த மனிதன் இன்று இந்த விஷயம் நிறைவேறும்வரை ஓய்ந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள்.

<- ரூத் 2ரூத் 4 ->