1 ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு. 2 இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள்.
கிறிஸ்துவின் உடலில் தாழ்மையான சேவை
3 இறைவன் எனக்களித்த தன் கிருபையின்படி, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கிறதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக்குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக்குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். 4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது, அதில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை. 5 அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு உறுப்புகளாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம். 6 நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே, நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கிறோம். இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம்பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும். 7 அப்படியே சேவைசெய்கிறவன் சேவை செய்வதிலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 உற்சாகப்படுத்துகிறவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகிறவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் கவனத்தோடு நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும்.