Link to home pageLanguagesLink to all Bible versions on this site
10
இறைத்தூதனும் சிறிய புத்தகச்சுருளும்
1 பின்பு இன்னொரு வல்லமையுள்ள இறைத்தூதன் பரலோகத்திலிருந்து கீழே வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக, ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன. 2 அவன் ஒரு திறந்த சிறிய புத்தகச்சுருளைத் தனது கையில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வலதுகாலைக் கடலிலும், தன்னுடைய இடதுகாலைத் தரையிலும் ஊன்றி நின்று, 3 சிங்கத்தின் கர்ஜிப்பைப்போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்டபோது, ஏழு இடிமுழக்கங்கள் மறுமொழியாகச் சத்தமிட்டுப் பேசின. 4 அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபொழுது, நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன்; ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை முத்திரையிடு, அதை எழுதவேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.

5 பின்பு கடலின்மேலும், தரையின்மேலும் நிற்கிறவனாக நான் கண்ட அந்தத் தூதன், தன்னுடைய வலதுகையை, பரலோகத்தை நோக்கி உயர்த்தினான். 6 அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! 7 ஏழாவது தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களிலே, இறைவனுடைய இரகசியம் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவைகள் நிறைவேறும்” என்றான்.

8 பின்பு பரலோகத்திலிருந்து நான் கேட்ட அந்தக் குரல், இன்னொருமுறை என்னுடனே பேசியது: “போ, கடலின்மேலும், தரையின்மேலும் நின்றுகொண்டிருக்கின்ற, அந்த இறைத்தூதனுடைய கையில் திறக்கப்பட்டு இருக்கின்ற அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொள்” என்றது.

9 எனவே, நான் அந்த இறைத்தூதனிடம் போய், அந்தச் சிறிய புத்தகச்சுருளை எனக்குத் தரும்படி, அவனிடம் கேட்டேன். அவன் என்னிடம், “நீ இதை எடுத்து சாப்பிடு. இது உன் வயிற்றில் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் உன் வாய்க்கு, இது தேனைப்போல் இனிமையாயிருக்கும்”[a] என்றான். 10 நான் அந்தத் தூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச்சுருளை எடுத்து, அதைச் சாப்பிட்டேன். அது என் வாய்க்கு, தேனைப்போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் சாப்பிட்டு முடித்தபோதோ, அது என்னுடைய வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தியது. 11 அப்பொழுது, “நீ பல மக்களைக் குறித்தும், பல நாட்டினரைக் குறித்தும், மொழியினரைக் குறித்தும், அரசர்களைக் குறித்தும் மீண்டும் இறைவாக்கு உரைக்கவேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

<- வெளிப்படுத்தல் 9வெளிப்படுத்தல் 11 ->