Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 88
மகலாத் லேயனோத் என்னும் இசையில் வாசிக்க, எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
1 யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்;
இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.
2 என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக;
என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.
 
3 என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது;
என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
4 நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்;
நான் பெலனற்ற மனிதனைப்போல் இருக்கிறேன்.
5 நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்;
நீர் இனி எப்போதும் உம்மால் நினைவுகூரப்படாமல்
உமது கவனத்திலிருந்து அகற்றப்பட்டு,
பாதாளத்தில் அழிக்கப்பட்டவர்கள்போல் ஆனேன்.
 
6 நீர் என்னை மிகுந்த இருளில்,
ஆழம் மிகுந்த படுகுழியில் போட்டுவிட்டீர்.
7 உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது;
உமது அலைகள் எல்லாவற்றினாலும் நீர் என்னை மூடிவிட்டீர்.
8 என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி,
என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்;
நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன்.
9 என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன.
 
யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன்.
10 இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ?
இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?
11 பிரேதக்குழியில் உமது அன்பும்,
அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?
12 உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும்,
மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?
 
13 ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
14 யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்?
உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?
 
15 என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்;
நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன்.
16 உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது;
உமது திகில் என்னைத் தாக்குகிறது.
17 அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன;
என்னை அவை முழுமையாய் வளைத்துக்கொண்டன.
18 நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும்
என்னைவிட்டு அகற்றினீர்;
இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது.

<- சங்கீதம் 87சங்கீதம் 89 ->