Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 69
“லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1 இறைவனே, என்னைக் காப்பாற்றும்;
வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது.
2 கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்;
ஆழமான வெள்ளத்தில்
நான் அகப்பட்டு விட்டேன்;
வெள்ளம் என்னை மூடுகிறது.
3 சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்;
என் தொண்டையும் வறண்டுபோயிற்று;
என் இறைவனைத் தேடி
என் கண்கள் மங்கிப்போயின.
4 காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்
என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்;
அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள்.
நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க
கட்டாயப்படுத்தப்படுகிறேன்.
 
5 இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்;
என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.
 
6 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே,
உமக்காகக் காத்திருக்கிறவர்கள்
என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக;
இஸ்ரயேலின் இறைவனே,
உம்மைத் தேடுகிறவர்கள்
என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக.
7 உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்;
வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது
8 நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும்
என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன்.
9 ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது;
உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது.
10 நான் அழுது உபவாசித்தபோது,
அவர்கள் என்னை நிந்தித்தார்கள்.
11 நான் துக்கவுடை உடுத்தும் போது,
அவர்களுக்குப் பழமொழியானேன்.
12 நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்;
நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.
 
13 ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே,
நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம்
நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.
14 சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும்,
என்னை மூழ்கிப்போக விடாதேயும்;
என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும்
ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும்.
15 வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்;
ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்;
சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.
 
16 யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது;
உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.
17 உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும்,
விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன்.
18 என்னருகே வந்து என்னைத் தப்புவியும்;
என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
 
19 என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்;
என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20 நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால்
நான் களைத்துப் போனேன்.
நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை;
ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை.
21 அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்;
என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.
 
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்
அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக.
23 அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும்,
அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும்.
24 உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;
உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக.
25 அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக;
அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக.
26 ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி,
நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.
27 அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்;
அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும்.
28 வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக;
நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.
 
29 நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்;
இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.
 
30 நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,
நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.
31 காணிக்கையாகக் கொடுக்கும்
கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,
மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும்.
32 இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்;
இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக!
33 யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்;
சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.
 
34 வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்;
கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
35 இறைவன் சீயோனை மீட்டு,
யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்;
அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
36 அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்;
அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.

<- சங்கீதம் 68சங்கீதம் 70 ->