Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 60
ஆராம் நகராயிம், ஆராம் சேபா என்ற அரசுகளோடு தாவீது போர் செய்கையில் யோவாப் உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெற்றிக்கொண்டபோது, “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் மிக்தாம் என்னும் சங்கீதத்தை போதனையாக தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1 இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்;
நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும்.
2 நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்;
அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும்.
3 கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்;
தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்.
4 ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள்,
வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர்.
 
5 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,
உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
6 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:
“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்;
சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
எப்பிராயீம் என் தலைக்கவசம்,
யூதா என் செங்கோல்.
8 மோவாப் என் கழுவும் பாத்திரம்,
நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்;
நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
 
9 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?
யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
10 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,
எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
11 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
12 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;
அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.

<- சங்கீதம் 59சங்கீதம் 61 ->