Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 22
“காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1 என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமல்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2 என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை;
இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
 
3 ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்
நீர் பரிசுத்தர்.
4 உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்;
நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர்.
5 அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்;
உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
 
6 ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல;
மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7 என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்;
அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள்
8 “அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான்,
யெகோவா அவனை இரட்சிக்கட்டும்.
அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால்
அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
 
9 ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர்.
நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே
என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.
10 நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்;
நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
 
11 நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்;
ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது,
உதவிசெய்ய ஒருவருமில்லை.
 
12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன;
பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன.
13 தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல,
அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள்.
14 என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது;
என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின;
என் இருதயம் மெழுகு போலாகி
எனக்குள்ளே உருகிப் போயிற்று.
15 என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று;
என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது;
என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
 
16 நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது;
என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
17 என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்;
மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
18 அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு,
என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
 
19 ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்;
என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
20 என்னை வாளுக்குத் தப்புவியும்;
என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும்.
21 சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்;
காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
 
22 அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன்,
திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்;
இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள்.
24 ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை,
அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை.
அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை;
ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.
 
25 நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்;
உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக
நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
26 ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்;
அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
 
27 பூமியின் கடைசிகளெல்லாம்
யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்;
நாடுகளின் குடும்பங்கள் எல்லாம்
அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும்.
28 ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது;
அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
 
29 பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்;
மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்
அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள்.
30 பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்;
வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும்.
31 அவர்கள் அவருடைய நீதியை,
இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்:
அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.

<- சங்கீதம் 21சங்கீதம் 23 ->