Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 17
தாவீதின் மன்றாட்டு
1 யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும்,
என் கதறுதலுக்குச் செவிகொடும்;
வஞ்சகமில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும்
என் மன்றாட்டைக் கேளும்.
2 நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்;
உமது கண்கள் நேர்மையானதைக் காணட்டும்.
 
3 நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும்,
இரவில் என்னைச் சோதித்தாலும்,
நீர் எந்தத் தீங்கையும் கண்டுபிடிக்கமாட்டீர்;
என் வாயினால் நான் பாவம் செய்யமாட்டேனென்று தீர்மானித்திருக்கிறேன்.
4 மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும்,
உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து,
என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
5 உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன;
என்னுடைய பாதங்கள் தடுமாறவில்லை.
 
6 இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுக்கிறவர்.
எனக்குச் செவிகொடுத்து என் மன்றாட்டைக் கேளும்.
7 உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை,
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தினால் காப்பாற்றுகிறவரே,
உமது உடன்படிக்கையின் அன்பின் அதிசயத்தைக் காண்பியும்.
8 உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்;
உமது சிறகுகளின் நிழலின்கீழ்,
9 என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்துகொள்ளும் என் பகைவரிடமிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
 
10 அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள்,
அவர்களின் வாய்கள் பெருமையுடன் பேசுகின்றன.
11 அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்,
இப்பொழுது என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
என்னைத் தரையில் விழத்தள்ளுவதற்காக
அவர்களுடைய கண்கள் விழிப்பாயிருக்கின்றன.
12 அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும்
மறைவில் பதுங்கியிருக்கிற பெரும் சிங்கத்தைப் போலவும் இருக்கிறார்கள்.
 
13 யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்;
கொடியவர்களிடமிருந்து உமது வாளினால் என்னைத் தப்புவியும்.
14 யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும்,
இம்மையிலேயே தங்கள் வெகுமதியைப் பெறுகிற இவ்வுலக மனிதரிடமிருந்தும்,
உமது கரத்தினால் என்னைக் காப்பாற்றும்;
நீர் கொடியவர்களுக்கென்று வைத்திருக்கிறவைகளால் அவர்களுடைய வயிற்றை நிரப்பும்;
அவர்களுடைய பிள்ளைகள் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளட்டும்;
மீதியானதை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லட்டும்.
 
15 நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்;
நான் விழித்தெழும்போது உம்மைக் கண்டு திருப்தியடைவேன்.

<- சங்கீதம் 16சங்கீதம் 18 ->