சங்கீதம் 11 5
1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது அன்பின் நிமித்தமும்,
உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.
2 பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?”
என்று ஏன் கேட்கிறார்கள்.
3 நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்;
அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.
4 ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,
மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
5 அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது;
கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.
6 அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது;
மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது;
கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது;
தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.
8 அவைகளைச் செய்கிறவர்களும்,
அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
11 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
12 யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்;
அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்;
அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற
பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.
14 யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக,
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.
15 வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய
யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.
16 மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை;
பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.
17 இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை,
மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.
18 இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம்.
யெகோவாவுக்குத் துதி.