Link to home pageLanguagesLink to all Bible versions on this site
20
1 திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்;
அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.
 
2 அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது;
அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.
 
3 சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை;
ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
 
4 சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை;
அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.
 
5 மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்;
மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
 
6 அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்;
ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
 
7 நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்;
அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
 
8 நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது,
அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
 
9 “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்;
நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?
 
10 பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள்
ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
 
11 சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை
தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
 
12 கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள்
ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.
 
13 தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்;
விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
 
14 பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்;
வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
 
15 தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்;
ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
 
16 பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்;
வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
 
17 மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்;
ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.
 
18 நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்;
ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
 
19 புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்;
ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
 
20 ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால்,
கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.
 
21 ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து,
முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.
 
22 “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே;
யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
 
23 போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்;
போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
 
24 மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்;
அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
 
25 முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு,
பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.
 
26 ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்;
பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.
 
27 மனிதருடைய ஆவி*மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள் யெகோவா தந்த விளக்கு;
அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
 
28 அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது;
அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
 
29 வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்;
முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
 
30 அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்;
பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.