3 ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான். 4 அந்த குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த விதமாவது: அதன் அடிப்பாகத்திலிருந்து நுனியிலுள்ள பூக்கள்வரை அது அடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. யெகோவா மோசேக்குக் காட்டிய குத்துவிளக்கின் வடிவத்தைப் போலவே அது செய்யப்பட்டிருந்தது.
12 “லேவியர் அக்காளைகளின் தலையில் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அதன்பின் ஒரு காளையைப் பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தி, இன்னொன்றை லேவியருக்கான பாவநிவிர்த்தி செய்யும்படி, தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். 13 ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் முன்பாக லேவியரை நிறுத்தி, யெகோவாவுக்கு அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவேண்டும். 14 இவ்விதம் நீ லேவியரை இஸ்ரயேலருக்குள் இருந்து வேறுபிரிக்க வேண்டும். லேவியர் எனக்குரியவர்களாக இருப்பார்கள்.
15 “நீ லேவியரைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபின், அவர்கள் சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையைச் செய்வதற்கு வரவேண்டும். 16 முழுவதுமாக எனக்காகக் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர் அவர்களே. ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்ணும் பெற்றெடுக்கும் முதற்பேறான ஆண் பிள்ளைகளுக்குப் பதிலாக நான் லேவியர்களை எனக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டேன். 17 இஸ்ரயேலின் முதற்பேறான ஒவ்வொரு ஆணும் எனக்குரியவன். மனிதனின் முதற்பேறும், மிருகத்தின் தலையீற்றும் எனக்குரியவை. எகிப்தில் முதற்பேறானவற்றையெல்லாம் நான் அழித்தபோது, அவர்களை எனக்காக நான் வேறுபிரித்தேன். 18 எனவே நான் இஸ்ரயேலரின் முதற்பேறான எல்லா ஆண்களுக்கும் பதிலாக இப்பொழுது லேவியரை தெரிந்துகொண்டேன். 19 இஸ்ரயேலர் எல்லோருக்குள்ளும் இருந்து நான் லேவியரை பிரித்தெடுத்து, அவர்களை ஆரோனுக்கும், அவனுடைய மகன்களுக்கும் கொடைகளாகக் கொடுத்திருக்கிறேன். லேவியர் இஸ்ரயேலரின் சார்பாக சபைக் கூடாரத்தில் வேலை செய்வதற்காகவும், இஸ்ரயேலர் பரிசுத்த இடத்திற்கு அருகே போகும்போது, அவர்கள் கொள்ளைநோயினால் வாதிக்கப்படாதபடி, அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காகவுமே கொடுத்திருக்கிறேன்” என்றார்.
20 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும், முழு இஸ்ரயேலின் சமுதாயமும் லேவியருக்கு எல்லாவற்றையும் செய்தார்கள். 21 லேவியரும் தங்களைச் சுத்திகரித்துத் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் ஆரோன் அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். 22 அதன்பின் லேவியர் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய மேற்பார்வையின்கீழ், சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தார்கள்.
23 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 24 “இது லேவியர்களுக்குரிய விதிமுறையாகும்: இருபத்தைந்து வயது உடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள், சபைக்கூடார வேலையில் பங்கெடுக்க வரவேண்டும். 25 ஆனால் ஐம்பது வயதில் அவர்கள் தங்கள் வழக்கமான பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அதற்குமேல் வேலைசெய்யக்கூடாது. 26 எனினும் அவர்கள் சபைக் கூடாரத்தில் கடமை செய்வதில் தங்கள் சகோதரர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் அவர்கள் தாங்களாகவே அந்த வேலையைச் செய்யக்கூடாது. இவ்விதமாகவே லேவியர்களின் பொறுப்பை நீ அவர்களுக்கு நியமித்துக் கொடுக்கவேண்டும்.”
<- எண்ணாகமம் 7எண்ணாகமம் 9 ->