16 “ ‘ஆசாரியன் அவளை யெகோவாவுக்குமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். 17 பின்பு அவன், பரிசுத்த தண்ணீரை ஒரு மண் பாத்திரத்தினுள் ஊற்றி, இறைசமுகக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அதற்குள் போடவேண்டும். 18 ஆசாரியன் அப்பெண்ணை யெகோவா முன்பாக நிறுத்திய பின், அவளுடைய தலைமயிரை விரித்துவிடவேண்டும். சாபத்தைக் கொண்டுவரும் கசப்புத் தண்ணீரை ஆசாரியன் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கையில், எரிச்சலுக்கான தானிய காணிக்கையான நினைவூட்டும் காணிக்கையை அவளுடைய கைகளில் வைக்கவேண்டும். 19 பின் ஆசாரியன் அவளைச் சத்தியம் செய்யப்பண்ணி, அவளிடம் சொல்லவேண்டியதாவது: “நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், வேறு ஒரு மனிதனுடன் உறவுகொள்ளாமலும், முறைதவறி நடந்து உன்னைக் கறைப்படுத்தாமலும் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் இக்கசப்பு தண்ணீர் உனக்குத் தீங்கு செய்யாதிருப்பதாக. 20 ஆனால் நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து வேறு ஒரு மனிதனுடன் உறவுகொண்டு உன்னை அசுத்தப்படுத்தியிருந்தால்” 21 யெகோவா உன் தொடையை அழுகப்பண்ணி, உன் வயிற்றை வீங்கப்பண்ணுகிறபோது*வீங்கப்பண்ணுகிறபோது அல்லது மலடாக்குதல்., உன் மக்கள் உன்னைச் சபித்து, பகிரங்கமாக உன்னை நிந்திக்கும்படி செய்வாராக’ என்ற இந்த சாபத்தின் சத்தியத்திற்கு ஆசாரியன் அவளை உட்படுத்தவேண்டும். 22 இந்த சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் உடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்கவும், உன் தொடையை அழுகவும் செய்வதாக என்றும் சொல்லவேண்டும்.”
23 “ ‘பின்பு ஆசாரியன் இந்த சாபங்களை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அவற்றை அந்தக் கசப்புத் தண்ணீருக்குள் கழுவிவிடவேண்டும். 24 அதன்பின் சாபத்தைக் கொண்டுவரும் அக்கசப்புத் தண்ணீரை அவள் குடிக்கும்படி செய்யவேண்டும். அத்தண்ணீர் அவளின் உடலுக்குள் போய் கசப்பான வேதனையை உண்டுபண்ணும். 25 ஆசாரியன் அப்பெண்ணின் கையில் இருந்து எரிச்சலுக்கான தானிய காணிக்கையை வாங்கி, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டி, அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும். 26 அத்தானிய காணிக்கையில் ஆசாரியன் ஒரு கைப்பிடி எடுத்து, ஞாபகார்த்தக் காணிக்கையாக பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன்பின் அப்பெண் அத்தண்ணீரைக் குடிக்கும்படிச் செய்யவேண்டும். 27 அவள் தன்னை அசுத்தப்படுத்தி, தன் கணவனுக்கு உண்மையற்றவளாய் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்போது, அது அவளுக்குள்போய், கசப்பான வேதனையைக் கொண்டுவரும். அப்பொழுது அவள் வயிறு வீங்கி, அவளுடைய தொடையும் அழுகிப்போகும். அவளும் தன் மக்கள் மத்தியில் சபிக்கப்பட்டவளாவாள். 28 ஆனாலும், அவள் கறைப்படாமல் கெட்டநடத்தை அற்றவளாக சுத்தமாக இருந்தால், அவள் அக்குற்றங்களுக்கு நீங்கலாகிப் பிள்ளைகளைப் பெறுவாள்.
29 “ ‘ஒரு பெண் தன் கணவனுடன் திருமணத்தில் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து தன்னைக் கறைப்படுத்தினால், எரிச்சலுக்கான சட்டம் இதுவே. 30 அல்லது ஒருவன் தன் மனைவியின்மேல் சந்தேகப்படுவதால், அவனுக்கு எரிச்சல் உணர்வு வரும்போது, அதற்கான சட்டமும் இதுவே. அவன் அவளை யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, ஆசாரியன் இந்த முழு சட்டத்தின்படியும் அவளுக்குச் செய்யவேண்டும். 31 கணவனோ எந்தக் குற்றத்திற்கும் நீங்கலாயிருப்பான். தன் பாவத்தினால் வந்த விளைவுகளை அப்பெண்ணே அனுபவிக்கவேண்டும்’ ” என்றார்.
<- எண்ணாகமம் 4எண்ணாகமம் 6 ->- a வீங்கப்பண்ணுகிறபோது அல்லது மலடாக்குதல்.