4 “சபைக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்த இடத்தின் பொருட்களைப் பராமரிப்பதே கோகாத்தியர் செய்யவேண்டிய வேலையாகும். 5 முகாம் நகர்த்தப்படும்போது, முதலில் ஆரோனும் அவன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் நின்று, மறைக்கும் திரையைக் கழற்றி, அதனால் சாட்சிப்பெட்டியை மூடவேண்டும். 6 பின்பு அவர்கள் அதைக் கடல்பசுத் தோலினால்[a] மூடி, தனி நீலநிறத் துணியொன்றை அதன்மேல் விரித்து, கம்புகளை அவற்றுக்குரிய இடங்களில் வைக்கவேண்டும்.
7 “அடுத்ததாக, இறைப்பிரசன்ன மேஜையின்மேல் நீலநிறத் துணியை விரித்து, அதன்மேல் தட்டங்கள், தட்டுகள், கிண்ணங்கள், பானகாணிக்கை ஜாடிகள் ஆகியவற்றை வைக்கவேண்டும். மேஜையின்மேல் தொடர்ந்து வைக்கும் அப்பம் அதிலே இருக்கவேண்டும். 8 அப்பொருட்களின் மேல் சிவப்புநிறத் துணியை விரித்து, அவை எல்லாவற்றையும் கடல்பசுத் தோலினால் மூடி, அதன் கம்புகளை அதற்குரிய இடங்களில் வைக்கவேண்டும்.
9 “பின்பு ஒரு நீலநிறத் துணியை எடுத்து, வெளிச்சத்திற்குரிய குத்துவிளக்கு, அதனுடன் இருக்கும் அகல்விளக்குகள், விளக்குத்திரி கத்தரிகள், தட்டங்கள், எண்ணெய் விடுவதற்குப் பயன்படுத்தும் ஜாடிகள் ஆகியவற்றை மூடவேண்டும். 10 அவற்றையும் அவற்றிற்குரிய உபகரணங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து, அந்த கடல்பசுத் தோலினால் சுற்றிக்கட்டி, சுமக்குந்தடிகளில் அதை வைக்கவேண்டும்.
11 “அதன்பின் தங்கத்தூபபீடத்தின்மேல் நீலநிறத் துணியை விரித்து, அதனை கடல்பசுத் தோலினால் மூடி, அதன் கம்புகளை அதற்குரிய இடத்தில் வைக்கவேண்டும்.
12 “அத்துடன் பரிசுத்த இடத்தில் குருத்துவப் பணிக்கு பயன்படுத்தத் தேவையான எல்லா பொருட்களையும், ஒரு நீலநிறத்துணியில் வைத்துச் சுற்றிக்கட்டி, கடல்பசுத் தோலினால் மூடி, சுமக்குந்தடிகளில் அவற்றை வைக்கவேண்டும்.
13 “அவர்கள் வெண்கலப் பீடத்திலிருந்து சாம்பலை அகற்றி, அதற்குமேல் ஊதாநிறத் துணியை விரிக்கவேண்டும். 14 பலிபீடத்தில் குருத்துவப் பணிக்காகப் பயன்படுத்தும் எல்லா பாத்திரங்களையும் அதன்மேல் வைக்கவேண்டும். அவையாவன: நெருப்புச் சட்டி, இறைச்சியை குத்தும் முட்கரண்டிகள், சாம்பல் அள்ளும் வாரிகள் மற்றும் தெளிக்கும் கிண்ணங்கள் ஆகும். அவற்றின்மேல் கடல்பசுத் தோலை விரித்து கம்புகளை அவற்றுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும்.
15 “ஆரோனும் அவன் மகன்களும் பரிசுத்த பணிமுட்டுகளையும் பரிசுத்த பொருட்கள் எல்லாவற்றையும் மூடவேண்டும். முகாம் நகருவதற்கு ஆயத்தமாகும்போது, கோகாத்தியர் வந்து அதைச் சுமக்கவேண்டும். ஆனால் கோகாத்தியர் அப்பரிசுத்த பொருட்களைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். சபைக் கூடாரத்தில் இருக்கும் பொருட்களை கோகாத்தியரே சுமக்கவேண்டும்.
16 “ஆரோனின் மகன் ஆசாரியன் எலெயாசார், வெளிச்சத்திற்கான எண்ணெய், நறுமண தூபம், வழக்கமான தானிய காணிக்கை, அபிஷேக எண்ணெய் ஆகியவற்றிற்குப் பொறுப்பாயிருக்க வேண்டும். அவன் முழு இறைசமுகக் கூடாரத்திற்கும் அதன் பரிசுத்த பணிமுட்டுகள், பொருட்கள் உட்பட அதிலுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பாயிருக்க வேண்டும்” என்றார்.
17 பின்பு யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது: 18 “லேவியரிடமிருந்து கோகாத்திய கோத்திர வம்சங்கள் அழிந்துபோகாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். 19 மகா பரிசுத்த பொருட்களை அணுகும்போது, அவர்கள் சாகாமல் வாழும்படி, நீங்கள் செய்யவேண்டியதாவது: ஆரோனும் அவன் மகன்களும் பரிசுத்த இடத்திற்குள் போய், அவனவனுக்குரிய வேலையையும், அவனவன் சுமக்க வேண்டியது என்ன என்பதையும் நியமிக்கவேண்டும். 20 ஆனால் கோகாத்தியர் பரிசுத்த இடத்துப் பொருட்களைப் பார்க்கும்படி ஒரு வினாடியேனும் உள்ளே போவார்களானால் அவர்கள் சாவார்கள்” என்றார்.
24 “கெர்சோனிய வம்சங்கள் வேலைசெய்யும்போதும், சுமை சுமக்கும்போதும் அவர்களுக்குரிய பணி என்னவென்றால்: 25 சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் திரைகள், கூடாரம், அதன் மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட அதன் வெளிப்புற மூடுதிரை, சபைக்கூடார நுழைவாசலுக்கான திரைகள் ஆகியவற்றை அவர்கள் சுமக்கவேண்டும். 26 அத்துடன், இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியுள்ள முற்றத்தின் திரைகள், முற்றத்தின் வாசல் திரை, அதன் கயிறுகள் மற்றும் அதன் பணியில் பயன்படுத்தும் உபகரணங்கள் எல்லாவற்றையும் அவர்கள் சுமக்கவேண்டும். அவை தொடர்பாகச் செய்யப்படவேண்டிய எல்லாவற்றையும் கெர்சோனியரே செய்யவேண்டும். 27 தூக்குவதானாலும், வேறு எந்த வேலைசெய்வதானாலும் அவர்களுடைய எல்லா பணிகளும் ஆரோனுடைய அவன் மகன்களுடைய வழிகாட்டலிலேயே செய்யப்படவேண்டும். அவர்கள் சுமக்கவேண்டிய அவர்களுடைய பொறுப்பை நீ அவர்களுக்கு நியமிக்கவேண்டும். 28 சபைக் கூடாரத்தில் கெர்சோனிய வம்சங்களின் பணி இதுவே. அவர்களுடைய கடமைகள் ஆசாரியனான ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிநடத்துதலிலேயே செய்யப்படவேண்டும்.
- a கடல்பசுத் தோலினால் யாத். 25:5.