9 “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும். 10 அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.
11 “ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். 12 அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான். 13 ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது.
14 “கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான். 15 மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும்.
16 “வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான்.
17 “அசுத்தமான மனிதனுக்காக, எரிக்கப்பட்ட சுத்திகரிப்பின் காணிக்கையிலிருந்து கிடைத்த சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, ஜாடியில் போட்டு, அதற்குள்ளே சுத்தமான தண்ணீரை ஊற்றவேண்டும். 18 பின்பு சம்பிரதாயப்படி சுத்தமாயிருக்கும் ஒருவன் கொஞ்சம் ஈசோப்புக் குழையை எடுத்து, அந்த தண்ணீரில் தோய்த்து, அதை கூடாரத்திலும், அங்குள்ள பணிப்பொருட்களின்மேலும், அங்குள்ள மக்கள்மேலும் தெளிக்கவேண்டும். அப்படியே மனித எலும்பையோ, கல்லறையையோ, கொல்லப்பட்டவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ யாராவது தொட்டிருந்தால் அவன் மேலும் அத்தண்ணீரை தெளிக்கவேண்டும். 19 இவ்வாறு சுத்தமாயிருக்கிறவன், சுத்தமில்லாதிருக்கிறவன்மேல் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் இவனைச் சுத்திகரிக்கவேண்டும். சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அன்று மாலை அவன் சுத்தமாவான். 20 ஆனால் அசுத்தமான ஒருவன் தன்னைச் சுத்திகரியாமல்விட்டால், அவன் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில் அவன் யெகோவாவின் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினான். அந்த சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமுள்ளவனாயிருக்கிறான். 21 இது அவர்களுக்கு ஒரு நித்திய நியமமாயிருக்கிறது.