6 அப்படியே மோசே, இஸ்ரயேலரிடம் சொன்னான். அவர்களின் தலைவர்கள் தங்கள் முற்பிதாக்களின் கோத்திர தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக பன்னிரண்டு கோல்களைக் கொடுத்தார்கள். ஆரோனின் கோலும் அவற்றின் மத்தியில் இருந்தது. 7 மோசே அந்தக் கோல்களை சாட்சிபகரும் கூடாரத்தில் யெகோவா முன்னிலையில் வைத்தான்.
8 மறுநாள் மோசே சாட்சிபகரும் கூடாரத்திற்குள் வந்தபோது, அங்கே லேவி குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆரோனின் கோல் துளிர்த்தது மட்டுமல்லாமல், மொட்டுவிட்டுப் பூத்து, வாதுமைக் காய்களையும் கொண்டிருந்தது. 9 பின்பு மோசே யெகோவா முன்னிருந்த கோல்களையெல்லாம் எடுத்து வெளியில் இருந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் கொண்டுவந்தான். அவர்கள் அவற்றைப் பார்த்து, ஒவ்வொருவரும் தன்தன் கோல்களை எடுத்துக்கொண்டார்கள்.
10 ஆனால் யெகோவா மோசேயிடம், “இக்கலகக்காரருக்கு ஒரு அடையாளமாக வைக்கப்படும்படி ஆரோனின் கோலைத் திரும்பவும் சாட்சிப்பெட்டியின் முன்னேவை. அது எனக்கு விரோதமான அவர்களின் முறுமுறுப்புக்கு ஒரு முடிவை உண்டாக்கும். அதனால் அவர்களும் சாகாதிருப்பார்கள்” என்றார். 11 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
12 அப்பொழுது இஸ்ரயேலர் மோசேயிடம், “நாங்கள் செத்தோம்! நாங்கள் தொலைந்தோம்! நாங்கள் எல்லோருமே தொலைந்தோம்! 13 யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு அருகே வருபவன் எவனும் சாவான். நாங்கள் எல்லோரும் சாகப்போகிறோம்” என்றார்கள்.
<- எண்ணாகமம் 16எண்ணாகமம் 18 ->