Link to home pageLanguagesLink to all Bible versions on this site
12
மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல்
1 மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள். 2 அவர்கள், “யெகோவா மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ?” என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.

3 மோசே மிகவும் தாழ்மையுள்ளவன். அவன் பூமியிலுள்ள எல்லா மனிதரைப் பார்க்கிலும் தாழ்மையுள்ளவனாயிருந்தான்.

4 உடனே யெகோவா மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் வெளியே சபைக் கூடாரத்திற்கு வாருங்கள்” என்றார். மூவரும் வெளியே வந்தார்கள். 5 அப்பொழுது யெகோவா மேகத்தூணில் இறங்கிவந்து, சபைக் கூடாரத்தின் வாசலில் நின்றார். அவர் ஆரோனையும், மிரியாமையும் அழைத்தார். அவர்கள் இருவரும் முன்னே வந்தார்கள். 6 அப்பொழுது யெகோவா அவர்களிடம் சொன்னது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்:

“உங்களுக்குள் இறைவாக்குரைப்பவன் ஒருவன் இருந்தால்,
யெகோவாவாகிய நான் அவனுக்குத் தரிசனங்களில் என்னை வெளிப்படுத்துவேன்,
கனவுகளில் அவனோடு பேசுவேன்.
7 ஆனால் என் அடியவன் மோசேயுடனோ அப்படியல்ல;
என் முழு வீட்டிலுமே அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.
8 ஆகையால் நான் அவனோடு நேரடியாகவே பேசுகிறேன்,
புரியாதவிதமாக அல்ல தெளிவாகவே பேசுகிறேன்;
அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்.
அப்படியிருக்க, என் அடியான் மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு
நீங்கள் ஏன் பயப்படவில்லை?”

9 அப்பொழுது யெகோவாவின் கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது, அவர் அவர்களைவிட்டு விலகிப்போனார்.

10 அந்த மேகம் கூடாரத்திலிருந்து எழும்பியவுடன் மிரியாம் உறைபனியைப்போல் குஷ்டரோகியாய் நின்றாள். ஆரோன் அவளைத் திரும்பிப் பார்த்தபோது, அவளுக்குக் குஷ்டரோகம் இருப்பதைக் கண்டான். 11 அப்பொழுது ஆரோன் மோசேயிடம், “என் ஆண்டவனே, தயவுசெய்து நாங்கள் மூடத்தனமாய் செய்த பாவத்திற்காக எங்களுக்கு விரோதமாயிராதேயும். 12 தாயின் கருப்பையிலேயே பாதி சதை அழிந்து செத்துப்பிறந்த குழந்தையைப்போல் அவளை இருக்கவிடாதேயும்” என்றான்.

13 அப்பொழுது மோசே யெகோவாவிடம், “இறைவனே, தயவுசெய்து அவளைக் குணமாக்கும்” என அழுது வேண்டிக்கொண்டான்.

14 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “அவள் தகப்பன் அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால் ஏழுநாட்களுக்கேனும் அவள் அவமானத்துடன் இருக்கமாட்டாளோ? எனவே ஏழுநாட்களுக்கு அவளை முகாமுக்கு வெளியே வையுங்கள். அதற்குப்பின் திரும்பவும் அவளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார். 15 அப்படியே மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டாள். அவள் திரும்பி வரும்வரை மக்கள் அவ்விடம் விட்டு அசையவில்லை.

16 அதன்பின் மக்கள் ஆஸ்ரோத்தை விட்டுப் பிரயாணமாகி, பாரான் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

<- எண்ணாகமம் 11எண்ணாகமம் 13 ->