Link to home pageLanguagesLink to all Bible versions on this site

நாகூம்

1 நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.

 
நினிவேக்கு எதிரான யெகோவாவின் கோபம்
2 யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்;
யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும்,
கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார்.
யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து,
தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
3 யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்;
யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்;
அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது.
மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.
4 அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்;
ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார்.
பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன.
லெபனோனின் பூக்கள் வாடுகின்றன.
5 அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்;
குன்றுகள் உருகிப்போகும்.
அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும்.
உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள்.
6 அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்?
அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்?
அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது;
அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
 
7 யெகோவா நல்லவர்,
அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர்.
அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.
8 ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால்
நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;
அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.
 
9 அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும்
அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;
துன்பம் இரண்டாம் முறையும் வராது.
10 அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு,
தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள்.
அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.
11 நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து,
கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன்,
உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.

12 யெகோவா சொல்வது இதுவே:

அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன.
“அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள்.
யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும்,
இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.
13 நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன்.
உன் விலங்குகளையும் உடைப்பேன்.”
 
14 நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார்.
“உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள்.
உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன்.
நீ வெறுப்புக்குரியவனானபடியால்,
நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
 
15 யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து,
நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள்,
உன் மலைகள்மேல் வருகின்றன.
உன் பண்டிகைகளைக் கொண்டாடு.
உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று.
கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை;
அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.

நாகூம் 2 ->