Link to home pageLanguagesLink to all Bible versions on this site
16
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1 ஓய்வுநாள் முடிவடைந்தபோது, மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும், இயேசுவின் உடலுக்கு வாசனைத் தைலம் பூசும்படி, நறுமணப் பொருட்களை வாங்கினார்கள். 2 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, பொழுது விடிகையில், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள். 3 “கல்லறையின் வாசலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித்தள்ளுவான்?” என்று, அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

4 ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 5 அவர்கள் கல்லறைக்குள்ளே நுழைந்தபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள்.

6 அப்பொழுது அவன் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். ஆனால் அவரோ உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள். 7 நீங்கள் போய், அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் சொல்லுங்கள், ‘இயேசு உங்களுக்குச் சொன்னதுபோலவே, உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். நீங்களும் அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான்.

8 அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்கள் பயந்ததினால், ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை.

9 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார். 10 அவள் போய் அவரோடு இருந்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்கையில், அதைச் சொன்னாள். 11 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை.

12 இதற்குப் பின்பு இயேசு நாட்டுப்புறமாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்குத் தம்மை வேறொரு உருவத்தில் வெளிப்படுத்தினார். 13 இவர்கள் திரும்பிப்போய், இதை மற்ற சீடர்களுக்கும் அறிவித்தார்கள்; ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை.

14 பின்பு சீடர்கள் பதினொருபேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்; அவர் சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

15 இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். 16 யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து, திருமுழுக்கு பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள். 17 விசுவாசிக்கிறவர்கள் மத்தியில், இந்த அடையாளங்கள் காணப்படும்: எனது பெயரில் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புதிய மொழிகளில் பேசுவார்கள்; 18 அவர்கள் பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; சாகவைக்கக் கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடுவிளைவிக்காது; அவர்கள் நோயாளிகளின்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்” என்றார்.

19 கர்த்தராகிய இயேசு அவர்களுடன் பேசி முடித்தபின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 20 அதற்குப் பின்பு, அவருடைய சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி, தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.*பழைமையான பிரதிகளிலும் வேறுசில பழைய சாட்சிகளிலும். 16:9-20 வசனங்கள் இல்லை.

<- மாற்கு 15