Link to home pageLanguagesLink to all Bible versions on this site
28
இயேசு உயிர்த்தெழுதல்
1 ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கும்படி சென்றார்கள்.

2 அப்பொழுது திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லைப் புரட்டித் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்திருந்தான்: இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. 3 அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடைகள் உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. 4 காவல் செய்த அந்தக் காவலாளர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கிச் செத்தவர்கள் போலானார்கள்.

5 அப்பொழுது இறைத்தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். 7 “நீங்கள் விரைவாகப் போய், அவருடைய சீடர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார், உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்.’ இதோ நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றும் சொன்னான்.

8 எனவே, அந்தப் பெண்கள் பயமடைந்தவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் கல்லறையைவிட்டு விரைந்து, நடந்ததை சீடர்களிடம் சொல்லும்படி ஓடினார்கள். 9 ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடமாய் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப்பிடித்து, அவரை வழிபட்டார்கள். 10 இயேசு அவர்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

காவலாளரின் அறிக்கை
11 அந்தப் பெண்கள் வழியில் போய்க்கொண்டிருக்கையில், அந்தக் காவலாளர்களில் சிலர் பட்டணத்திற்குள் போய், தலைமை ஆசாரியர்களிடம் நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். 12 தலைமை ஆசாரியர் யூதரின் தலைவர்களைச் சந்தித்து, திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்தப் படை வீரர்களுக்கு ஒரு பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து, 13 “நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டார்கள்’ என்று சொல்லுங்கள். 14 இந்தச் செய்தி ஆளுநனுக்கு எட்டினால், நாங்கள் அவனைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சனை ஏற்படாதபடி பார்த்துக் கொள்வோம்” என்றார்கள். 15 எனவே படைவீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதையே சொன்னார்கள். இந்தக் கதை இந்நாள்வரை யூதர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்டிருக்கிறது.
முக்கிய பொறுப்பை ஒப்படைத்தல்
16 அப்பொழுது பதினொரு சீடர்களும் கலிலேயாவுக்குச் சென்றார்கள். அவர்கள் தாங்கள் போக வேண்டுமென்று இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த மலைக்குச் சென்றார்கள். 17 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவரை வழிபட்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18 பின்பு இயேசு அவர்களிடம் வந்து, “வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 19 எனவே நீங்கள் புறப்பட்டுப்போய் எல்லா நாட்டின் மக்களையும் எனக்குச் சீடராக்குங்கள். பிதா, மகன், பரிசுத்த ஆவியானவருடைய பெயரில் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார்.

<- மத்தேயு 27