1 ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநனாக இருந்தான். அக்காலத்தில் ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அவனது சகோதரன் பிலிப்பு இத்துரேயா, திராகொனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். 2 அக்காலத்தில் அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராய் இருந்தார்கள். அப்பொழுது பாலைவனத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது. 3 அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். 4 இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது:
“பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது,
‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்.
5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்,
ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்.
கோணலான வீதிகள் நேராகும்,
கரடுமுரடான வழிகள் சீராகும்.
6 மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”[a]
7 யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெறும்படி வந்த மக்களுக்குச் சொன்னதாவது, “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்? 8 நீங்கள் மனந்திரும்பியிருந்தால் அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பனாக இருக்கிறார்,’ என்று உங்களுக்குள்ளே சொல்லவேண்டாம். ஏனெனில், இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 9 கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது; நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்” என்றான்.
10 அப்பொழுது கூடியிருந்த மக்கள் அவனிடம், “அப்படியானால், நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
11 யோவான் அதற்குப் பதிலாக, “இரண்டு உடைகளை வைத்திருப்பவன் உடைகள் இல்லாதவனுடன் பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை வைத்திருக்கிறவனும் அவ்வாறே செய்யட்டும்” என்றான்.
12 வரி வசூலிக்கிறவர்களும் திருமுழுக்குப் பெறும்படி வந்து, அவனிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
13 யோவான் அவர்களிடம், “வசூலிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்குமேல், எதையும் வசூலிக்கவேண்டாம்” என்றான்.
14 அப்பொழுது சில படைவீரர்கள் அவனிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
அவன் அவர்களிடம், “மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தவேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்துடன் திருப்தியாய் இருங்கள்” என்றான்.
15 மக்கள் கிறிஸ்துவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்ததால், “யோவான்தான் கிறிஸ்துவாயிருப்பாரோ?” என்று தங்கள் இருதயங்களில் யோசித்துக் கொண்டிருந்தார்கள். 16 யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுள்ள ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார். 17 அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான். 18 யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்தி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.
19 ஆனால் சிற்றரசன் ஏரோது தனது சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை திருமணம் செய்திருந்ததினாலும், வேறு பல தீய காரியங்களைச் செய்ததினாலும் யோவான் அவனைக் கண்டித்தான். 20 இதனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்து, தான் செய்த தீய செயல்களுடன் இதையும் கூட்டிக் கொண்டான்.
இயேசுவின் திருமுழுக்கும் வம்ச வரலாறும்
21 இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவும் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு, 22 பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் அவர்மேல் இறங்கினார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நீர் என்னுடைய அன்பு மகன், நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.
23 இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார்.