10 “யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. 11 அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன். 12 எனவே யெகோவா அந்த நாளில் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்த மலைநாட்டை இப்பொழுது எனக்குத் தாரும். ஏனாக்கியர் அங்கே வசிக்கிறார்களென்றும், அவர்களுடைய பட்டணங்கள் பெரிய அரண்களுடைய பட்டணங்களென்றும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். யெகோவா சொன்னபடியே அவருடைய உதவியுடன் நான் அவர்களைத் துரத்திவிடுவேன்” என்றான்.
13 எனவே யோசுவா எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, அவனுக்கு எப்ரோன் பிரதேசத்தைச் சொத்துரிமையாகக் கொடுத்தான். 14 கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவை முழுமனதுடன் பின்பற்றியதால், அன்றிலிருந்து இன்றுவரை எப்ரோன் பிரதேசம் அவனுக்குச் சொந்தமாக இருந்து வருகிறது. 15 இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது.