Link to home pageLanguagesLink to all Bible versions on this site
4
யெகோவாவின் இரக்கமும் யோனாவின் கோபமும்
1 ஆனால் யோனாவோ அதிருப்தியடைந்து கோபங்கொண்டான். 2 அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும். 3 இப்பொழுதும், யெகோவாவே, என் உயிரை எடுத்துவிடும், நான் வாழ்வதைவிட சாவது மேலானது. ஏனெனில் நான் நினிவேயின் அழிவைக்குறித்து இறைவாக்குரைத்திருக்கிறேன்” என மன்றாடினான்.

4 ஆனால் யெகோவா அவனிடம், “நீ கோபமடைவது சரியானதோ?” எனக் கேட்டார்.

5 யோனா வெளியே போய் பட்டணத்தின் கிழக்கே ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் தனக்கென ஒரு குடிசையைப் போட்டு, அதன் நிழலில் அமர்ந்து அந்தப் பட்டணத்திற்குச் சம்பவிக்கப் போகிறதைப் பார்ப்பதற்காக அங்கு காத்திருந்தான். 6 அப்பொழுது யெகோவாவாகிய இறைவன், யோனாவுக்கு மேலாக ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கப்பண்ணி, அதை வளரச்செய்தார். அது யோனாவுக்கு மேலாக வளர்ந்து, படர்ந்து அவனுக்கு நிழல் கொடுத்து, அவனுடைய கஷ்டத்தை நீக்கியது. யோனா அந்த ஆமணக்குச்செடியைக் குறித்து மிகவும் சந்தோஷமடைந்தான். 7 ஆனால் மறுநாள் அதிகாலையில் இறைவன் ஒரு புழுவை அனுப்பினார், அது அந்த ஆமணக்குச்செடி முழுவதையும் அரித்ததினால் அது வாடிப்போயிற்று. 8 சூரியன் உதித்து மேலே எழும்பியபோதோ, இறைவன் கடுஞ்சூடான கொண்டற்காற்றை அனுப்பினார், உச்சிவெயில் யோனாவின் தலையைச் சுட்டதினால், அவன் மிகவும் சோர்வுற்றுத் தளர்ந்துபோனான். “வாழ்வதைவிட எனக்கு சாவதே மேல்” எனக் கூறினான்.

9 ஆனால் இறைவன் யோனாவிடம், “இந்த ஆமணக்குச்செடிக்கு ஏற்பட்டதைப் பற்றி நீ கோபமடைவது சரியானதோ?” என்றார்.

அதற்கு அவன், “ஆம், சாகுமளவுக்கு எனக்குக் கோபம் உண்டு” என்றான்.

10 அதற்கு யெகோவா, “நீ அந்த ஆமணக்குச்செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் தானாகவே முளைத்து, ஒரே இரவில் அது செத்துப்போயிற்று. அதைக்குறித்து நீ கவலைப்படுகிறாயே. 11 ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசங்கூட தெரியாத, இலட்சத்து இருபதாயிரம்பேருக்கும் அதிகமான மக்கள் நினிவேயில் இருக்கிறார்கள். ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் அங்கு இருக்கின்றன. அந்த பெரிய பட்டணத்தைக் குறித்து நான் அக்கறைகொள்ள வேண்டாமோ?” என்று கேட்டார்.

<- யோனா 3