Link to home pageLanguagesLink to all Bible versions on this site
7
1 “பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே?
அவனுடைய நாட்கள் கூலிக்காரனின் நாட்களைப் போன்றதல்லவா?
2 ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும்,
கூலியாள் தன் கூலிக்காக காத்திருப்பது போலவும்,
3 பயனற்ற மாதங்களும்,
துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன.
4 நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்;
இரவு நீண்டுகொண்டே போகிறது, நானோ விடியும்வரை புரண்டு கொண்டிருக்கிறேன்.
5 என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது,
எனது தோல் வெடித்துச் சீழ்வடிகிறது.
 
6 “நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன;
அவை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலேயே முடிவடைகின்றன.
7 என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்;
என் கண்கள் இனி ஒருபோதும் சந்தோஷத்தைக் காண்பதில்லை.
8 இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை;
நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன்.
9 மேகம் கலைந்து போவதுபோல்,
பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை.
10 அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை.
 
11 “ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்;
எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன்,
எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன்.
12 நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா?
அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா?
13 என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
என் படுக்கையில் எனக்கு அமைதி கிடைக்கும் என்றும் நான் நினைத்தாலும்,
14 நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி,
தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர்.
15 இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும்,
குரல்வளை நெரிக்கப்பட்டு சாவதை விரும்புகிறேன்.
16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்;
என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை,
என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை.
 
17 “நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும்,
அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும்,
18 காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்?
19 நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ?
ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ?
20 மானிடரைக் காப்பவரே,
நான் பாவம் செய்திருந்தால், உமக்கெதிராய் நான் செய்தது என்ன?
நீர் என்னை உமது இலக்காக வைத்திருப்பது ஏன்?
நான் உமக்குச் சுமையாகிவிட்டேனா?
21 நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை?
என் பாவங்களை ஏன் மன்னிக்கவில்லை?
இப்பொழுதே நான் இறந்து தூசியில் போடப்படுவேன்.
நீர் என்னைத் தேடும்போது, நான் இருக்கமாட்டேன்.”

<- யோபு 6யோபு 8 ->