Link to home pageLanguagesLink to all Bible versions on this site
5
1 “நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்?
பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?
2 கோபம் மூடனைக் கொல்லும்,
பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.
3 மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன்,
ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
4 அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்,
வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.
5 பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை
முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்;
பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.
6 ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை;
தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
7 தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
 
8 “ஆனாலும் நான், இறைவனைத் தேடி,
அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
9 அவர் ஆராய முடியாத அதிசயங்களையும்,
கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
10 பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே;
நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
11 அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி,
துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
12 அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி,
அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
13 இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்,
தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
14 பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்;
இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.
15 இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து,
வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
16 ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு,
அநீதி தன் வாயை மூடும்.
 
17 “இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.
18 அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்;
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
19 ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்;
அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
20 பஞ்சத்தில் சாவிலிருந்தும்
யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.
21 தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்;
பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.
22 அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்;
நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
23 வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய்,
காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
24 உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்;
உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
25 உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய்.
உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.
26 ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல்,
உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
 
27 “நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம்.
நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”

<- யோபு 4யோபு 6 ->