Link to home pageLanguagesLink to all Bible versions on this site
24
1 “எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்?
அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்?
2 மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்;
அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள்.
3 அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்;
விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள்.
4 அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்;
அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள்.
5 காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல்,
ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்;
அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது.
6 வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்;
கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள்.
7 அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்;
குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை.
8 மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்;
தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள்.
9 தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது;
ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது.
10 ஏழைகள் உடையின்றி நடந்து,
அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள்.
11 அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்;
ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள்.
12 சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது,
காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள்,
ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
 
13 “கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்;
அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும்,
அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள்.
14 பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து,
ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று,
இரவில் திருடனைப்போல் திரிகிறான்.
15 விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன;
அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி,
தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.
16 பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை
இரவில் கன்னமிடுகிறார்கள்;
வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
17 அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது;
இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
 
18 “அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்;
நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால்,
அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
19 வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல,
பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும்.
20 அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும்,
புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும்.
தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை,
மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
21 அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள்,
விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
22 இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்;
அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
23 இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும்,
அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
24 சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்;
தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
 
25 “இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து,
என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”

<- யோபு 23யோபு 25 ->