Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 இன்னொருநாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். 2 அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?”

எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.

3 பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார்.

4 சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான். 5 ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான்.

6 அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார்.

7 எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான். 8 யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.

9 அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள்.

10 அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான்.

இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை.
 
11 யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள். 12 அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள். 13 அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

<- யோபு 1யோபு 3 ->