Link to home pageLanguagesLink to all Bible versions on this site
17
1 என் மூச்சு நின்றுபோகிறது,
என் வாழ்நாட்கள் முடிகின்றன,
கல்லறை எனக்குக் காத்திருக்கிறது.
2 கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்;
அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது.
 
3 “இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும்.
வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்?
4 விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர்.
ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
5 தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால்,
அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.
 
6 “இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்;
என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர்.
7 துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின;
என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று.
8 நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்;
குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்.
9 ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்;
சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.
 
10 “நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்!
நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை.
11 என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன.
என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின.
12 இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்;
வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள்.
13 நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால்,
நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால்,
14 நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும்,
புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால்,
15 என் நம்பிக்கை எங்கே?
யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா?
16 என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ?
அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?”

<- யோபு 16யோபு 18 ->