Link to home pageLanguagesLink to all Bible versions on this site
13
1 “இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது,
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2 உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்;
நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
3 ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும்,
இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
4 எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்;
நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
5 நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால்,
அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6 இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்;
என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
7 இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ?
அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
8 அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ?
இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
9 அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ?
மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
10 நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும்,
அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
11 அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ?
அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
12 உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்;
உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
 
13 “பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்;
அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
14 ஏன் நான் என்னையே இடரில் மாட்டி,
உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
15 அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்;
ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
16 இது என் விடுதலைக்குக் காரணமாகும்,
இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
17 நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்;
நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
18 எனது வழக்கு ஆயத்தம்,
நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
19 எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்?
அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
 
20 “இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும்,
அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்,
உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
22 அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன்,
அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
23 அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்?
என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
24 நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
25 காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ?
பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
26 ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்;
என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
27 நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர்,
அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
 
28 “ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும்,
பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.