Link to home pageLanguagesLink to all Bible versions on this site
10
1 “நான் என் வாழ்வை வெறுக்கிறேன்;
அதினால் எனது குற்றச்சாட்டைத் தாராளமாகச் சொல்வேன்,
எனது ஆத்துமக் கசப்பைப் பேசுவேன்.
2 நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும்,
எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன்.
3 கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு,
உமது கைகளினால் நீர் படைத்த
என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ?
4 உமக்கு மானிடக் கண்கள் உண்டோ?
நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ?
5 உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும்,
உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ?
6 அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்?
எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்?
7 நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும்,
உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும்.
 
8 “உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன.
இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ?
9 களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும்.
இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ?
10 நீர் என்னைப் பால்போல வார்த்து
வெண்ணெய்க் கட்டிபோல உறையச் செய்தீரல்லவோ?
11 தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி,
எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ?
12 நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர்,
உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர்.
 
13 “ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே,
இது உமது மனதில் இருந்தது என்பதை நான் அறிவேன்.
14 நான் பாவம்செய்தால், நீர் என்னைக் கவனித்து,
என் குற்றங்களைத் தண்டிக்காமல் விடமாட்டீர் என நான் அறிந்திருக்கிறேன்.
15 நான் குற்றவாளியாய் இருந்தால் எனக்கு ஐயோ கேடு!
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும் என்னால் தலைதூக்க முடியாது.
ஏனெனில், நான் அவமானத்தால் நிறைந்து,
வேதனையில் அமிழ்ந்து போயிருக்கிறேன்.
16 நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து,
திகிலூட்டும் வல்லமையைக் காண்பிக்கிறீர்.
17 நீர் எனக்கெதிராக புதிய சாட்சிகளைக் கொண்டுவந்து,
என்மேலுள்ள உமது கோபத்தை அதிகரிக்கிறீர்,
அலைமேல் அலையாக உமது படைகள் எனக்கு விரோதமாய் வருகின்றன.
 
18 “அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்?
யாரும் என்னைப் பார்க்குமுன் நான் இறந்திருக்கலாமே.
19 நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்;
கருவறையிலிருந்து கல்லறைக்கே போயிருக்கலாம்!
20 என் வாழ்நாட்கள் முடிகிறது,
நான் மகிழ்ந்திருக்கும்படி சில மணித்துளிகள் நீர் விலகியிரும்.
21 பின்னர், மந்தாரமும் மரண இருளும் சூழ்ந்த,
போனால் திரும்பி வரமுடியாத நாட்டிற்குப் போவேன்.
22 மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை,
ஒளியும் இருளாய்த் தோன்றும்.”

<- யோபு 9யோபு 11 ->