யெகோவா பூமியில் புதியதொரு காரியத்தை உண்டாக்குவார்.
ஒரு பெண் ஒரு மனிதனை பாதுகாத்துக்கொள்வாள்.”
23 இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள். 24 யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள். 25 நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.”
26 இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
27 “நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார். 28 “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். 29 “அந்நாட்களில் மக்கள்,
பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.
30 ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.”
31 யெகோவா அறிவிக்கிறதாவது,
“இஸ்ரயேல் குடும்பத்தோடும்
யூதா குடும்பத்தோடும்
நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.
32 அது அவர்களுடைய முற்பிதாக்களை
என்னுடைய கரத்தினால்
எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது,
நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை.
ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும்,
அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
33 “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன்
செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன்.
அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன்,
அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
34 இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ,
தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான்.
ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை
எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன்.
அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”
35 யெகோவா சொல்வது இதுவே:
பகலில் ஒளிகொடுக்க
சூரியனை நியமிக்கிறவர் அவரே.
இரவில் வெளிச்சம் கொடுக்க சந்திரனுக்கும்,
நட்சத்திரங்களுக்கும் கட்டளையிடுகிறவர் அவரே.
கடலின் அலைகள் இரையும்படி
அதைக் கலக்குகிறவரும் அவரே.
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
36 “இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே,
இஸ்ரயேலரின் சந்ததிகள்
என்முன் ஒரு நாடாக இல்லாதபடி ஒழிந்துபோவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
37 யெகோவா கூறுவது இதுவே:
“மேலே உள்ள வானங்களை அளக்க முடியுமானால்,
கீழேயுள்ள பூமியின் அஸ்திபாரங்களை ஆராயக் கூடுமானால் மட்டுமே,
அவர்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும்
நான் இஸ்ரயேலின் வம்சத்தார் அனைவரையும் புறக்கணிப்பேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
38 “நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார். 39 அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும். 40 செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார்.