3 ஆனால் எரேமியா அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது, 4 ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, சொல்வது இதுவே: உங்கள் மதிலுக்கு வெளியே உங்களை முற்றுகையிடுகிற பாபிலோன் அரசனோடும், பாபிலோனியரோடும் சண்டையிட நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கைகளில் இருக்கிற போர் ஆயுதங்களை, உங்களுக்கு எதிராகவே நான் திருப்பப் போகிறேன். நான் அவர்களை பட்டணத்திற்குள் ஒன்றுசேர்ப்பேன். 5 என்னுடைய நீட்டிய கரத்தினாலும், வலிமையான புயத்தினாலும் நானே உங்களுக்கெதிராக யுத்தம் செய்வேன். கோபத்துடனும், கடுங்கோபத்துடனும், பெரும் ஆத்திரத்துடனும் யுத்தம் செய்வேன். 6 அத்துடன் இப்பட்டணத்தில் இருக்கும் மனிதரையும், மிருகங்களையும் அடித்து வீழ்த்துவேன். அவர்கள் பயங்கரமான கொள்ளைநோயினால் சாவார்கள். 7 யெகோவா அறிவிக்கிறதாவது, அதற்குப் பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவையும், அவனுடைய அதிகாரிகளையும், அவர்களுடன் கொள்ளைநோய்க்கும், வாளுக்கும், பஞ்சத்திற்கும் தப்பியிருக்கும் இந்தப் பட்டணத்து மக்களையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடத்திலும், அவர்களைக் கொலைசெய்ய தேடுகிற பகைவர்களிடத்திலும் ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான். அவன் அவர்களுக்கு இரக்கமோ, தயவோ, அனுதாபமோ காட்டமாட்டான்.’
8 “மேலும், நீ மக்களிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: பாருங்கள், நான் உங்களுக்கு முன்பாக வாழ்வின் வழியையும், சாவின் வழியையும் வைக்கிறேன். 9 இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிறவன் எவனோ அவன் வாளினாலோ, பஞ்சத்தினாலோ அல்லது கொள்ளைநோயினாலோ சாவான். வெளியே போய் உங்களை முற்றுகையிடுகிற பாபிலோனியரிடம் சரணடைகிறவன் எவனோ அவன் வாழ்வான். அவன் உயிர் தப்புவான். 10 நான் இப்பட்டணத்திற்கு நன்மையை அல்ல; தீமையையே நியமித்திருக்கிறேன். இந்தப் பட்டணம் பாபிலோன் அரசனின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் அதை நெருப்பால் அழித்துவிடுவான் என யெகோவா அறிவிக்கிறார்.’
11 “மேலும் யூதாவின் அரச குடும்பத்திடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்; 12 தாவீதின் குடும்பத்தாரே! யெகோவா கூறுவது இதுவே: