11 அப்பொழுது யெகோவா இஸ்ரயேலரிடம், “எகிப்தியர், எமோரியர், அம்மோனியர், பெலிஸ்தியர், 12 சீதோனியர், அமலேக்கியர், மீதியானியர் ஆகியோர் உங்களை ஒடுக்கியபோது நீங்கள் என்னை நோக்கி உதவிகேட்டு அழுதீர்களே. அப்பொழுது நான் உங்களை அவர்களுடைய கையினின்று காப்பாற்றவில்லையா? 13 அப்படியிருந்தும் நீங்கள் என்னைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். அதனால் இனிமேல் நான் உங்களைக் காப்பாற்றமாட்டேன். 14 நீங்கள் தெரிந்துகொண்ட தெய்வங்களிடம்போய் அழுங்கள். நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவை உங்களைக் காப்பாற்றட்டும்” என பதிலளித்தார்.
15 ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவிடம், “நாங்கள் பாவம்செய்தோம். நலமென நீர் நினைப்பதை எங்களுக்குச் செய்யும், ஆனாலும் எப்படியாவது தயவுசெய்து இப்பொழுது எங்களை விடுவியும்” என்று சொன்னார்கள். 16 உடனே அவர்கள் தங்கள் மத்தியிலிருந்த அந்நிய தெய்வங்களை அகற்றிப்போட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். இஸ்ரயேலரின் அவலத்தைத் தொடர்ந்து யெகோவாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
17 அம்மோனியர் ஆயுதம் தாங்கி கீலேயாத்தில் முகாமிட்டார்கள். இஸ்ரயேலரும் ஒன்றுகூடி மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். 18 அப்பொழுது கீலேயாத் மக்களின் தலைவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “முதன்முதல் அம்மோனியருக்கு எதிராக யார் தாக்கத் தொடங்குகிறானோ, அவனே கீலேயாத்தில் வாழும் எல்லோருக்கும் தலைவன்” என்று சொன்னார்கள்.
<- நியாயாதிபதிகள் 9நியாயாதிபதிகள் 11 ->