நீங்கள் பாலூட்டப்பட்டு இடுப்பில் சுமக்கப்படுவீர்கள்;
மடியில் தாலாட்டப்படுவீர்கள்.
13 ஒரு தாய் தனது பிள்ளையை தேற்றுவதுபோல,
நான் உங்களைத் தேற்றுவேன்;
நீங்கள் எருசலேமிலே ஆறுதல் அடைவீர்கள்.”
14 நீங்கள் இதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழும்;
நீங்கள் புல்லைப்போல செழிப்பீர்கள்.
யெகோவாவின் கரம் அவரது ஊழியர்களுக்கு காண்பிக்கப்படும்;
ஆனால் அவரின் கடுங்கோபமோ, அவருடைய பகைவர்களுக்குக் காட்டப்படும்.
15 இதோ, யெகோவா நெருப்புடன் வருகிறார்,
அவருடைய தேர்கள் சுழல்காற்றைப்போல் விரைகின்றன;
அவர் தம் கோபத்தை மூர்க்கமாகவும்
தமது கண்டனத்தை நெருப்பு ஜுவாலையாகவும் கொண்டுவருவார்.
16 ஏனெனில், யெகோவா தன் நியாயத்தீர்ப்பை எல்லா மனிதர்மேலும்
நெருப்பினாலும் தமது வாளினாலுமே நிறைவேற்றுவார்;
யெகோவாவினால் மரண தண்டனைக்குட்படுவோர் அநேகராய் இருப்பார்கள்.
17 “தங்களை வேறுபடுத்தி சுத்திகரித்துக்கொண்டு, தோட்டங்களின் நடுவிலே ஒருவர் பின் ஒருவர் பின்பற்றும்படி போகிறவர்கள் பன்றிகளின் இறைச்சியையும், எலியையும் மற்ற அருவருப்பானதையும் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் ஒன்றாய் அழிவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
18 “நான் அவர்கள் எல்லோருடைய செயல்களையும் எண்ணங்களையும் அறிவேன். அதனால் எல்லா நாட்டினரையும் எல்லா மொழி பேசுபவரையும் ஒன்றுசேர்க்க வர இருக்கிறேன்; அவர்கள் வந்து எனது மகிமையைக் காண்பார்கள்.
19 “நான் அவர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவேன். அவர்களில் தப்பியிருப்பவர்களில் சிலரை, தர்ஷீஸ், பூல்*சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் பூல் என்பது பூத் (லிபியா) என்றுள்ளது, விசேஷ வில்வீரர் இருக்கும் லூது, தூபால், யாவான்†யாவான் என்பது கிரீஸ் ஆகும் ஆகிய தேசத்தாரிடமும் அனுப்புவேன். எனது புகழைக் கேள்விப்படாமலோ, எனது மகிமையைக் காணாமலோ இருக்கும் தூர தீவுகளில் உள்ளவர்களிடமும் அனுப்புவேன். அவர்கள் நாடுகளிடையே எனது மகிமையை அறிவிப்பார்கள். 20 அவர்கள் உங்கள் சகோதரர் அனைவரையும், எல்லா நாடுகளிலிருந்தும் எருசலேமிலுள்ள எனது பரிசுத்த மலைக்கு யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்கள். குதிரைகள், தேர்கள், வண்டிகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றில் அவர்களைக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “இஸ்ரயேலர் தங்கள் தானிய காணிக்கைகளை, சம்பிரதாய முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திரங்களில் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவதைப்போல், அவர்களை கொண்டுவருவார்கள். 21 அவர்களில் சிலரை நான் ஆசாரியர்களாகவும் லேவியராகவும் இருக்கும்படி தெரிந்தெடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
22 “நான் உண்டாக்கும் புதிய வானமும் புதிய பூமியும் எனக்குமுன் நிலைத்திருப்பதுபோலவே, உங்களுடைய பெயரும், உங்கள் சந்ததிகளும் நிலைத்திருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். 23 “ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரைக்கும், ஒரு ஓய்வுநாளிலிருந்து மறு ஓய்வுநாள் வரைக்கும் மனுக்குலம் யாவும் வந்து என்முன் விழுந்து வழிபடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 24 “அவர்கள் வெளியே போய், எனக்கு எதிராகக் கலகம் செய்தவர்களின் பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களைத் தின்னும் புழு சாகாது, அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்துபோகாது. அவர்கள் எல்லா மனுக்குலத்திற்கும் அருவருப்பாய் இருப்பார்கள்.”