Link to home pageLanguagesLink to all Bible versions on this site
57
1 நீதியானவர்கள் அழிகின்றார்கள்,
இதைப்பற்றி ஒருவருமே தங்கள் இருதயத்தில் சிந்திப்பதில்லை;
பக்தியுள்ளவர்களும் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்;
தீமையிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியாகவே,
நீதியுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்
என்பதை ஒருவரும் விளங்கிக்கொள்வதில்லை.
2 நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து,
தங்கள் மரணத்தில் படுத்திருக்கும்போது,
இளைப்பாறுதல் பெறுகிறார்கள்.
 
3 “ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே,
விபசாரிகளுக்கும் வேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளே, நீங்கள் இங்கே வாருங்கள்.
4 யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்?
யாரைப் பழிக்க உங்கள் வாயைத்
உங்கள் நாவை நீட்டுகிறீர்கள்?
நீங்கள் கலகக்காரரின் பிள்ளைகள் அல்லவா?
பொய்யரின் சந்ததியல்லவா?
5 நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும்,
ஒவ்வொரு படர்ந்த மரத்தினடியிலும் காமவெறி கொள்கிறீர்கள்;
பாறைகளின் வெடிப்புகளிலும், தொங்கும் பாறைகளின் கீழும்
உங்கள் பிள்ளைகளைப் பலியிடுகிறீர்கள்.
6 வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும்
விக்கிரங்களே உங்கள் பங்கு;
அவை, அவைதான் உங்கள் பாகம்.
ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து,
தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள்.
இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ?
7 நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்;
பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய்.
8 உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால்
நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய்.
என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய்,
அதிலேறி அதை அகலமாக்கினாய்;
நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய்,
நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.
9 நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக்[a] தெய்வத்திடம் போனாய்;
நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய்.
நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்;
அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்!
10 உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள்,
ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை.
நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால்
சோர்ந்துபோகவில்லை.
 
11 “நீ யாருக்குப் பயந்து, நடுங்கி
எனக்குப் பொய்யாய் நடந்தாய்?
என்னை நினையாமலும்
இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்?
நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோ
நீ எனக்குப் பயப்படாது போனாய்?
12 நான் உனது நீதியையும் உனது வேலைகளையும்
உனது செயல்களையும் வெளிப்படுத்துவேன்;
அவை உனக்கு உதவாது.
13 நீ உதவிகேட்டு அழுகிறபோது,
நீ சேகரித்த விக்கிரகங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்!
காற்று அவைகளை அள்ளிக்கொண்டு போகுமே!
வெறும் மூச்சே அவைகளை அடித்துக்கொண்டும்.
ஆனால் என்னை நம்பியிருக்கிறவர்களோ,
நாட்டைத் தன் சொத்துரிமையாக்கி,
எனது பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”
மனமுடைந்தோருக்கு ஆறுதல்
14 அப்பொழுது:
“கட்டுங்கள், கட்டுங்கள், வீதியை ஆயத்தம் பண்ணுங்கள்!
எனது மக்களின் வழியிலுள்ள தடைகளை நீக்கிவிடுங்கள்” என்று சொல்லப்படும்.
15 உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான
பரிசுத்தர் என்னும் பெயரையுடையவர் சொல்வதாவது:
“இறைவனாகிய நான் உயரமான பரிசுத்த இடத்தில் வாழ்கிறேன்.
ஆனாலும் மனமுடைந்தவர்களுடனும், தாழ்மையான ஆவியுடையவர்களுடனும் இருக்கிறேன்.
ஆவியில் தாழ்மையுடையவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவும்,
மனமுடைந்தவர்களின் இருதயத்தைத் திடப்படுத்தவும் நான் அவர்களுடன் இருக்கிறேன்.
16 நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன்.
ஏனெனில் அப்பொழுது மனிதனின் ஆவி,
என்னால் படைக்கப்பட்ட மனித சுவாசம்,
எனக்குமுன் சோர்வடைந்துவிடும்.
17 அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன்,
அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன்,
ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.
18 அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்;
ஆயினும் நான் அவனைச் சுகப்படுத்துவேன்;
அவனை வழிநடத்தி, மீண்டும் அவனுக்கு ஆறுதல் அளிப்பேன்;
19 நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன்.
தொலைவிலும் அருகிலும் உள்ளவர்களுக்குச் சமாதானம், சமாதானம் என்றும்,
அவர்களை நான் சுகப்படுத்துவேன்”
என்றும் யெகோவா சொல்கிறார்.
20 ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்;
அதற்கு அமைதியாய் இருக்கமுடியாது,
அதன் அலைகள் சேற்றையும் சகதியையும் அள்ளிக்கொண்டுவரும்.
21 “கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.

<- ஏசாயா 56ஏசாயா 58 ->