19 எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார். 20 யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள். 21 நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும். 22 அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.
23 யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும். 24 நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும். 25 பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும். 26 யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.
27 இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது;
அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது;
அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன,
அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.
28 கழுத்துவரை உயர்ந்து,
புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது.
அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்;
மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார்.
அது அவர்களை வழிதவறப்பண்ணும்.
29 இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல,
நீங்கள் பாடுவீர்கள்.
இஸ்ரயேலின் கற்பாறையாகிய
யெகோவாவின் மலைக்கு
மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல,
உங்கள் உள்ளமும் மகிழும்.
30 யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்;
அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார்.
அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும்,
இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.
31 யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்;
அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.
32 யெகோவா யுத்த களத்திலே,
தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது,
அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும்,