16 அந்த நாளில் எகிப்தியர் பெண்களைப் போலாவார்கள். சேனைகளின் யெகோவா, தமது உயர்த்திய கரத்தை அவர்களுக்கு விரோதமாக ஓங்கும்போது, அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். 17 யூதா நாடும் எகிப்தியரைத் திகிலடையச் செய்யும். சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதின் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள்.
18 அந்த நாளிலே, எகிப்திலுள்ள ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, “சேனைகளின் யெகோவாவுக்கே உண்மையாயிருப்போம்” என ஆணையிடுவார்கள். அவைகளில் ஒன்று அழிவின் நகரம் என அழைக்கப்படும்.
19 அந்த நாளிலே எகிப்தின் மத்தியில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதன் எல்லையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னமும் இருக்கும். 20 இது எகிப்து தேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு ஒரு அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்கும். அவர்கள் தங்களை ஒடுக்குவோரினிமித்தம் யெகோவாவிடம் கதறியழும்போது, மீட்பரும் பாதுகாப்பவருமான ஒருவரை அவர்களிடம் அனுப்புவார்; அவர் அவர்களை விடுவிப்பார். 21 இப்படியாக யெகோவா எகிப்தியருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்; அந்நாளில் அவர்கள் யெகோவாவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் பலிகளாலும், தானிய பலிகளாலும் வழிபடுவார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து, அவைகளை நிறைவேற்றுவார்கள். 22 யெகோவா எகிப்தைக் கொள்ளைநோயால் வாதிப்பார்; அவர் அவர்களை வாதித்துக் குணமாக்குவார். அவர்கள் யெகோவாவிடத்தில் மனந்திரும்புவார்கள். அவரும் அவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு, அவர்களைச் சுகமாக்குவார்.
23 அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை ஒரு பெரும்பாதை இருக்கும். எகிப்தியர் அசீரியாவுக்கும், அசீரியர் எகிப்திற்கும் போவார்கள். எகிப்தியரும், அசீரியரும் ஒன்றுகூடி வழிபடுவார்கள். 24 அந்த நாளில் இஸ்ரயேல், எகிப்தியருடனும், அசீரியருடனும் மூன்றாவது அரசாய், பூமியிலே ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். 25 சேனைகளின் யெகோவா, “என் மக்களாகிய எகிப்தியரும், என் கைவேலையாகிய அசீரியரும், எனது உரிமைச்சொத்தான இஸ்ரயேலரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிப்பார்.