Link to home pageLanguagesLink to all Bible versions on this site
17
தமஸ்குவுக்கு எதிரான இறைவாக்கு
1 தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு:
“பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது;
அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
2 அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு,
மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்;
அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
3 எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்;
தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும்.
இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே,
சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்”
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
 
4 “அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்;
அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.
5 அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து,
தன் கையால் அறுவடை செய்வதுபோலவும்,
ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்
சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”
6 ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
“ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின்,
அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும்,
பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள்
விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”
 
7 அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்;
அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.
8 தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்;
அசேரா தேவதைகளின் தூண்களுக்கும்,
தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும்
மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள்.

9 இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.

10 நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து,
உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள்.
ஆதலால் சிறந்த தாவரங்களையும்,
வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும்
ஒழுங்காய் நாட்டினாலும்,
11 நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும்,
விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும்
அறுவடையில் ஒன்றும் இராது;
வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.
 
12 அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்;
அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள்.
மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்;
பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.
13 பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும்,
அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள்.
அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும்,
புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
14 மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்;
விடியுமுன் அழிவு;
நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே;
நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே.

<- ஏசாயா 16ஏசாயா 18 ->