Link to home pageLanguagesLink to all Bible versions on this site
9
இவ்வுலகிற்குரிய கூடாரத்தில் வழிபாடு
1 முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. 2 அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன. 3 அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. 4 அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும்[a] வைக்கப்பட்டிருந்தன. 5 அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை[b] நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.

6 இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள். 7 ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான். 8 முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார். 9 இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன. 10 இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.

கிறிஸ்துவின் இரத்தம்
11 நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார். 12 அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். 13 வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது. 14 அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும்.

15 ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார்.

16 ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும். 17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும். 18 இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை. 19 சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான். 20 தெளிக்கையில் அவன், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே”[c] என்று சொன்னான். 21 அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான். 22 உண்மையாகவே, மோசேயின் சட்டத்தின்படி எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.

23 இவ்விதமாய் பரலோகக் காரியங்களின் சாயல்கள், இப்படிப்பட்ட பலிகளினால் சுத்திகரிக்கப்படுவது அவசியமாயிருந்தது. அப்படியானால் பரலோகத்தின் நிஜமான காரியங்களோ, அவற்றைப் பார்க்கிலும் மேன்மையான பலிகளினாலேயே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா? 24 கிறிஸ்து மனித கையினால் உண்டாக்கப்பட்ட உண்மையான பரிசுத்த இடத்தின் அடையாளமான இடத்துக்குள் செல்லவில்லை; பரலோகத்திற்கு உள்ளேயே சென்று, அங்கே இறைவனின் முன்னிலையில் நமக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார். 25 பிரதான ஆசாரியன், ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்கிறதுபோல கிறிஸ்துவுக்கோ திரும்பத்திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் செல்லவேண்டிய அவசியமில்லை. 26 அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். 27 ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. 28 அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார்.

<- எபிரெயர் 8எபிரெயர் 10 ->