Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான். 2 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான். 3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. 4 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.

5 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது,

“நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”[a]
6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து,
“நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
ஆசாரியராக இருக்கிறீர்”[b]
என்று சொல்லியிருக்கிறார்.

7 இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது. 8 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். 10 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.

வழிவிலகாதிருக்க எச்சரிக்கை
11 இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது. 12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல. 13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான். 14 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

<- எபிரெயர் 4எபிரெயர் 6 ->