Link to home pageLanguagesLink to all Bible versions on this site
3
ஆபகூக்கின் மன்றாட்டு
1 இறைவாக்கினன் ஆபகூக், பாடிய மன்றாட்டு.
2 யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,
யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம்
நான் வியப்படைந்து நிற்கிறேன்.
எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும்,
எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்;
உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும்.
 
3 இறைவன் தேமானிலிருந்தும்[a],
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும்[b] வந்தார்.
அவரது மகிமை, வானங்களை மூடியது;
அவரது துதி, பூமியை நிரப்பியது.
4 அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப்போல் இருந்தது;
அவரது கையிலிருந்து ஒளிக்கதிர்கள் சுடர் வீசின,
அங்கே அவரது மகத்துவ வல்லமை மறைந்திருந்தது.
5 கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது;
வாதைநோய் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்தது.
6 அவர் நின்று பூமியை அளந்தார்;
அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின.
பூர்வீக மலைகள் நொறுங்கின,
என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன;
அவருடைய வழிகளோ நித்தியமானவை.
7 கூசானின் கூடாரங்கள் துன்பத்திற்குள்ளானதையும்,
மீதியானியரின் குடியிருப்புகள் துயரத்திற்குள்ளானதையும் நான் கண்டேன்.
 
8 யெகோவாவே ஆறுகளின்மேல், கோபங்கொண்டீரோ?
நீரோடைகளுக்கெதிராகவும் உமது கடுங்கோபமாக இருந்ததோ?
உமது குதிரைகள்மேலும்,
உமது வெற்றிகொண்ட தேரின்மேலும் நீர் சென்றபோது,
கடலுக்கு எதிராய் நீர் விரோதமாயிருந்தீரோ?
9 நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து,
அநேக அம்புகளை எய்வதற்காகத் தொடுத்தீர்.
நீர் ஆறுகளைக் கொண்டு பூமியைப் பிளந்தீர்;
10 மலைகள் உம்மைக் கண்டு துடித்தன.
பெருவெள்ளம் அடித்துக் கொண்டோடியது;
ஆழம் குமுறியது,
அது தன் கைகளை அலைகளுக்கு மேலே உயர்த்தியது.
 
11 உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும்,
உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும்,
சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.
12 கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர்.
கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர்.
13 உமது மக்களை விடுதலை செய்யவும்,
அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர்.
நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர்.
நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.
14 மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல,
அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள்.
அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே
அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.
15 கடலை உமது குதிரைகளினால் மிதித்து,
ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர்.
 
16 நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது.
அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது;
என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது;
என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த,
நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக,
நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.
17 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,
திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும்,
ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும்,
ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும்,
மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,
18 நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன்,
என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.
 
19 ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்;
என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார்,
என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார்.
எனது கம்பியிசைக் கருவிகளில், இசை இயக்குனருக்காக இசைக்கப்பட்டது.