Link to home pageLanguagesLink to all Bible versions on this site
25
ஆபிரகாமின் மரணம்
1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். 2 அவள் ஆபிரகாமுக்குச் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்களைப் பெற்றாள். 3 யக்க்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தகப்பன். தேதானின் சந்ததிகள் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோர். 4 ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா என்பவர்கள் மீதியானின் மகன்கள். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.

5 ஆபிரகாம் தனக்குரிய யாவற்றையும் ஈசாக்கிற்குக் கொடுத்தான். 6 ஆனால் அவன் உயிரோடிருக்கும்போதே, ஆபிரகாம் தன் வைப்பாட்டிகளின் மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்து, தன் மகன் ஈசாக்கிடமிருந்து விலக்கி, அவர்களைக் கிழக்கு நாட்டுக்கு அனுப்பிவிட்டான்.

7 ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தான். 8 ஆபிரகாம் பூரண ஆயுசுள்ள கிழவனாய், நல்ல முதிர்வயதில் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். 9 அவனுடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மயேலும் ஏத்தியனான சோகாரின் மகன் எப்ரோனின் வயலில், மம்ரேக்கு அருகேயுள்ள மக்பேலா எனப்படும் குகையில் அவனை அடக்கம்பண்ணினார்கள். 10 அந்த வயலை ஆபிரகாம் ஏத்தியரிடமிருந்து வாங்கியிருந்தான். அங்கே ஆபிரகாம் அவன் மனைவி சாராளுடன் அடக்கம்பண்ணப்பட்டான். 11 ஆபிரகாம் இறந்தபின் அவனுடைய மகன் ஈசாக்கை இறைவன் ஆசீர்வதித்தார். அப்போது அவன், பீர்லகாய்ரோயீ என்ற இடத்திற்கு அருகில் குடியிருந்தான்.

இஸ்மயேலின் சந்ததி
12 சாராளின் பணிப்பெண்ணான எகிப்தியப் பெண் ஆகார், ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் இஸ்மயேலின் வம்சவரலாறு இதுவே:
 
13 பிறப்பின் வரிசைப்படி இஸ்மயேலின் மகன்களின் பெயர்களாவன:
 
நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன்.
பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
14 மிஷ்மா, தூமா, மாசா,
15 ஆதாத், தேமா, யெத்தூர்,
நாபீஸ், கேத்மா.
 
16 ஆகியோரும் இஸ்மயேலின் மகன்களாவர். அவர்களுடைய குடியிருப்புகளின்படியும், முகாம்களின்படியும் பன்னிரண்டு கோத்திர ஆளுநர்களின் பெயர்களும் இவையே.
 
17 இஸ்மயேல் நூற்று முப்பத்தேழு வருடங்கள் வாழ்ந்தான். அவன் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். 18 அவனுடைய சந்ததிகள் ஆவிலா தொடங்கி, சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். அது அசீரியாவுக்குப் போகிற வழியில் எகிப்தின் எல்லைக்கு அருகேயிருந்தது. அவர்கள் தங்கள் சகோதரர் எல்லோருடனும் பகைமையுடனேயே வாழ்ந்துவந்தார்கள்.
யாக்கோபும் ஏசாவும்
19 ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வம்சவரலாறு இதுவே:
 
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன் ஆனான். 20 ஈசாக்கு ரெபெக்காளைத் திருமணம் செய்தபோது, நாற்பது வயதுடையவனாய் இருந்தான். ரெபெக்காள் பதான் அராமில் வாழ்ந்துவந்த அரமேயி தேசத்தானாகிய பெத்துயேலின் மகளும், லாபானின் சகோதரியுமாவாள்.

21 தன் மனைவி மலடியாய் இருந்தபடியால், ஈசாக்கு யெகோவாவிடத்தில் அவளுக்காக மன்றாடினான். யெகோவா அவன் மன்றாட்டைக் கேட்டார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பவதியானாள். 22 அவள் வயிற்றிலிருந்த குழந்தைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்பொழுது அவள், “எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று சொல்லி, யெகோவாவிடம் விசாரிக்கப் போனாள்.

23 அப்பொழுது யெகோவா ரெபெக்காளிடம் சொன்னது:

“உன் கர்ப்பத்தில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன;
உன் வயிற்றிலிருந்து இரண்டு மக்கள் கூட்டங்கள் பிரிக்கப்படும்.
ஒரு மக்கள் கூட்டம் மற்றதைவிட வலிமையுள்ளதாய் இருக்கும்,
மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்.”

24 பிரசவகாலம் வந்தபோது, அவள் கருப்பையில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. 25 முதலில் பிறந்த குழந்தை சிவந்த நிறமும், அதன் முழு உடலும் உரோமம் நிறைந்ததாயும் இருந்தது. ஆகவே அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். 26 அதன்பின் அவனுடைய சகோதரன், தன் கையினால் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அதனால் அவன் யாக்கோபு என்று பெயரிடப்பட்டான். ரெபெக்காள் இவர்களைப் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதுடையவனாயிருந்தான்.

27 அச்சிறுவர்கள் வளர்ந்தபோது, ஏசா வேட்டையில் திறமையுள்ளவனாயும், காடுகளில் தங்குபவனாயும் இருந்தான். ஆனால் யாக்கோபோ, பண்புள்ளவனாய் கூடாரங்கள் மத்தியில் வாழ்ந்தான். 28 வேட்டையாடும் இறைச்சியை விரும்பிய ஈசாக்கு, ஏசாவை நேசித்தான். ஆனால் ரெபெக்காளோ யாக்கோபை நேசித்தாள்.

29 ஒரு நாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா காட்டு வெளியிலிருந்து மிகவும் களைத்தவனாக வந்தான். 30 அப்பொழுது அவன் யாக்கோபிடம், “நான் களைத்துப் போயிருக்கிறேன்! சீக்கிரமாய் அந்தச் சிவப்புக் கூழில் எனக்குக் கொஞ்சம் தா!” என்று கேட்டான். அதினாலேயே ஏசாவுக்கு ஏதோம்*ஏதோம் என்றால் சிவப்பு என்று அர்த்தம். என்கிற பெயர் உண்டாயிற்று.

31 யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான்.

32 அதற்கு ஏசா, “என்னைப் பார், நான் சாகப்போகிறேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான்.

33 ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான்.

34 அதன்பின் யாக்கோபு ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், பயற்றங்கூழும் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான்.

இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை உதாசீனம் செய்தான்.

<- ஆதியாகமம் 24ஆதியாகமம் 26 ->