8 “ ‘ஆனால், இஸ்ரயேலின் மலைகளே, நீங்களோ என் மக்களாகிய இஸ்ரயேலருக்குக் கிளைகளைப் பரப்பி, பழங்களையும் விளைவிப்பீர்கள். ஏனெனில் அவர்கள் சீக்கிரமாக வீடுதிரும்புவார்கள். 9 பாருங்கள்! நான் உங்களில் அக்கறைகொண்டுள்ளேன். நான் உங்களுக்கு உதவிசெய்ய வருவேன். உங்கள் நிலங்களும் உழப்பட்டு விதைக்கப்படும். 10 மேலும் நான் உங்களிலுள்ள மக்களையும், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரையும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். நகரங்கள் குடியிருப்பாகும். இடிபாடுகள் மீண்டும் கட்டப்படும். 11 உங்களிலுள்ள மனிதர்களையும், மிருகங்களையும் எண்ணிக்கையில் பெருகப்பண்ணுவேன். அவர்கள் விருத்தியுள்ளவர்களாய்ப் பெருகுவார்கள். மிருகங்களும் பெருகும். முன்பு இருந்ததுபோலவே மக்களை உங்களில் குடியிருக்கப்பண்ணி, உங்களை முந்தின சிறப்பைவிட செழிப்புள்ளவர்களாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 12 மக்களை, என் மக்களாகிய இஸ்ரயேலரை உங்கள் மேலாக நடக்கும்படி செய்வேன். அவர்கள் உங்களை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களின் உரிமைச் சொத்தாவீர்கள். இனியொருபோதும் நீங்கள் அவர்களைப் பிள்ளையற்றவர்களாக்க மாட்டீர்கள்.
13 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் நாடு தனது சொந்த மனிதரை விழுங்கி, “தன் நாட்டைப் பிள்ளையற்றதாக்குகிறது என்பதாக மக்கள் உங்களைக் குறித்துச் சொல்கிறார்கள்” 14 ஆகையால் இனிமேல் நீங்கள் மனிதரை விழுங்கவோ அல்லது உங்கள் நாட்டைப் பிள்ளையற்றதாக்கவோ மாட்டீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 15 நான் உங்களை இனிமேல் நாடுகளின் பழிச்சொல்லைக் கேட்கச்செய்யமாட்டேன். மக்கள் கூட்டங்களின் ஏளனத்தால் இனி நீங்கள் வேதனையடைவதுமில்லை. அல்லது உங்கள் நாட்டை நான் விழப்பண்ணப்போவதுமில்லை என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
22 “ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள். 23 நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
24 “ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். 25 சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன். 26 நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். 27 மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன். 28 உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன். 29 உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன். 30 நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன். 31 அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள். 32 நான் இவ்வாறு செய்யப்போவது நீங்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்காக அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! உங்கள் நடத்தையினிமித்தம் வெட்கித்து அவமானமடையுங்கள்.
33 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்திகரிக்கும் நாளிலே, உங்கள் பட்டணங்களில் குடியேறச்செய்வேன். இடிபாடுகளெல்லாம் மீண்டும் கட்டப்படும். 34 பாழாக்கப்பட்ட இடங்கள் அதைக் கடந்துசெல்வோர் அனைவரது பார்வையிலும், பாழாய்க்கிடப்பதற்குப் பதிலாகப் பயிரிடப்பட்டதாயிருக்கும். 35 “பாழாக்கப்பட்டிருந்த இந்நாடு ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. பாழாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பாழிடங்களாய்க் கிடந்த பட்டணங்கள், இப்பொழுது காவலரண் செய்யப்பட்ட குடியிருப்புகளாகிவிட்டன என்று சொல்வார்கள்.” 36 அப்பொழுது அழிக்கப்பட்டதைத் திரும்பவும் கட்டியதும், பாழாய்க் கிடந்ததை திரும்பவும் பயிரிட்டதும் யெகோவாவாகிய நானே என்பதை உன்னைச்சூழ இருக்கும் நாடுகள் அறிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்; நானே இதைச் செய்வேன்.’
37 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேலின் வேண்டுதலுக்கு இன்னொருமுறையும் நான் இடமளித்து அவர்களுக்காக இதைச் செய்வேன். அவர்களுடைய மக்களைச் செம்மறியாடுகள்போல எண்ணற்றவர்களாக்குவேன். 38 பண்டிகைக் காலத்தில் எருசலேமுக்குக் கொண்டுவரப்படும் பலிக்கான மந்தைகளைப்போல், அவர்கள் எண்ணற்றவர்களாயிருப்பார்கள். பாழாக்கப்பட்ட பட்டணங்கள் இவ்விதமாய் மக்கள் திரளால் நிரப்பப்படும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
<- எசேக்கியேல் 35எசேக்கியேல் 37 ->