7 “ ‘ஆகவே மேய்ப்பர்களே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். 8 நான் வாழ்வது நிச்சயம்போலவே, என் மந்தைக்கு மேய்ப்பனொருவன் இல்லாத காரணத்தால் அவை களவாடப்பட்டன. அவை காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. என் மேய்ப்பர்கள் என் மந்தையைத் தேடாமல் என் மந்தையைப் பார்க்கிலும் தங்களையே கவனிக்கிறார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 9 ஆகவே மேய்ப்பர்களே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள். 10 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.
11 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான், நானே எனது செம்மறியாடுகளைத் தேடி அவைகளைப் பராமரிப்பேன். 12 ஒரு மேய்ப்பன் சிதறடிக்கப்பட்ட தன் மந்தைகளோடு இருக்கும்போது அவைகளைப் பராமரிப்பதைப்போலவே, என் செம்மறியாடுகளை நான் பராமரிப்பேன். மப்பும் மந்தாரமுமான நாளிலே, அவைகளைச் சிதறிப்போயிருந்த எல்லா இடங்களிலுமிருந்து நான் கூட்டிச்சேர்ப்பேன். 13 நான் அவைகளைப் பல நாடுகளிலும் நாடுகளிலுமிருந்து கூட்டிச்சேர்த்து, அவைகளுடைய சொந்த நாட்டிற்கே கொண்டுவருவேன். இஸ்ரயேலின் மலைகளின்மீதும், பள்ளத்தாக்குகளிலும் நாட்டின் எல்லா குடியிருப்புகளிலும் நான் அவைகளை மேய்ப்பேன். 14 நல்ல பசும் புற்தரைகளிலே நான் அவைகளைப் பராமரிப்பேன். இஸ்ரயேல் மலை உச்சிகள் அவைகளின் மேய்ச்சல் நிலங்களாயிருக்கும். அங்கே நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும். இஸ்ரயேல் மலைகளின் செழிப்பான பசும்புற்தரையில் அவை மேயும். 15 என் செம்மறியாடுகளை நானே பராமரித்து அவைகளை இளைப்பாறச் செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 16 தொலைந்து போனவற்றை நான் தேடி, வழிதப்பிப்போனவற்றைத் திருப்பிக் கொண்டுவருவேன். காயம்பட்டவற்றை நான் கட்டி, பெலவீனமானதைப் பெலப்படுத்துவேன். ஆனால் கொழுத்ததையும் பெலமுள்ளதையும் நான் அழித்துப்போடுவேன். நான் நீதியின்படியே மந்தையை மேய்ப்பேன்.
17 “ ‘என் மந்தையே, ஆண்டவராகிய யெகோவா உன்னைக்குறித்து கூறுவது இதுவே: நான் செம்மறியாட்டுக்கும் செம்மறியாட்டுக்கும் இடையே நியாயந்தீர்பேன். செம்மறியாட்டுக் கடாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் இடையில் நான் நியாயந்தீர்ப்பேன். 18 செம்மறியாட்டுக் கடாக்களே! வெள்ளாட்டுக் கடாக்களே! நல்ல பசும்புற்தரையில் நீங்கள் மேய்வது போதாதோ? மீதியான பசுந்தரையை உங்கள் கால்களால் மிதித்துப்போட வேண்டுமோ? தெளிந்த தண்ணீரைக் குடிப்பது உங்களுக்குப் போதாதோ? மீதியானவற்றை உங்கள் கால்களினால் கலக்கிச் சேறாக்க வேண்டுமோ? 19 என் மந்தை, நீங்கள் மிதித்துப்போட்டவற்றில் தின்று, உங்கள் கால்களினால் கலக்கியவற்றைக் குடிக்க வேண்டுமோ?
20 “ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா அவர்களுக்கு கூறுவது இதுவே. இதோ பார்! கொழுத்த செம்மறியாடுகளுக்கும் மெலிந்த செம்மறியாடுகளுக்குமிடையில் நானே தீர்ப்பு வழங்குவேன். 21 ஏனெனில் கொழுத்த செம்மறியாடுகளே, நீங்கள் பலவீனமான செம்மறியாடுகளையெல்லாம் உங்கள் கொம்புகளினால் முட்டி, தோளினாலும் விலாவினாலும் இடித்துத் தள்ளி, அவைகளைத் துரத்திவிட்டீர்கள். 22 ஆகவே நான் என் மந்தையைக் காப்பேன். அவை இனியொருபோதும் கொள்ளையாக மாட்டாது. செம்மறியாட்டுக்கும், செம்மறியாட்டுக்கும் இடையில் நான் தீர்ப்பு வழங்குவேன். 23 நான் என் அடியவனாகிய தாவீதை அவைகளின் ஒரே மேய்ப்பனாக ஏற்படுத்துவேன். அவன் அவைகளைப் பராமரிப்பான். அவன் அவைகளைப் பராமரித்து, அவைகளின் மேய்ப்பனாய் இருப்பான். 24 யெகோவாவாகிய நானே அவைகளின் இறைவனாயிருப்பேன். என் அடியவனாகிய தாவீது அவைகளின் மத்தியில் இளவரசனாயிருப்பான். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்.
25 “ ‘நான் என் மக்களோடு ஒரு சமாதான உடன்படிக்கை செய்து, காட்டு மிருகங்களை நாட்டிலிருந்து துரத்திவிடுவேன். அப்பொழுது அவர்கள் பாலைவனத்தில் வாழ்ந்தும் காடுகளில் உறங்கியும் பாதுகாப்பாயிருப்பார்கள். 26 அவர்களையும், என் மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள இடங்களையும் நான் ஆசீர்வதிப்பேன். நான் பருவகாலத்தில் மழையைப் பொழியச்செய்வேன். அது செழிக்கப்பண்ணும் ஆசீர்வாதமான மழையாக இருக்கும். 27 வெளியின் மரங்கள் தங்கள் பழங்களைக் கொடுக்கும். பூமி தன் விளைச்சலைக் கொடுக்கும். மக்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுடைய நுகத்தடிகளை நான் முறித்து, அடிமைப்படுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 28 அவர்கள் இனியொருபோதும் நாடுகளால் கொள்ளையிடப்படவும் மாட்டார்கள். காட்டு மிருகங்கள் அவர்களை விழுங்குவதுமில்லை. அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். அவர்களை ஒருவனும் பயமுறுத்துவதுமில்லை. 29 பயிருக்குப் பேர்பெற்ற ஒரு நிலத்தை நான் அவர்களுக்கு அளிப்பேன். அவர்கள் இனியொருபோதும் நாட்டில் வரும் பஞ்சத்துக்கு இரையாவதில்லை. தேசத்தாரின் கேலிக்கும் ஆளாவதில்லை. 30 அப்பொழுது இறைவனும் கர்த்தருமாகிய நான் அவர்களோடிருக்கிறேன் என்றும், இஸ்ரயேல் குடும்பமாகிய அவர்கள் என் மக்கள் என்றும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 31 என் செம்மறியாடுகளே, என் மேய்ச்சலின் செம்மறியாடுகளே, நீங்கள் என் மக்கள். நானே உங்கள் இறைவன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல் என்றார்.’ ”
<- எசேக்கியேல் 33எசேக்கியேல் 35 ->