Link to home pageLanguagesLink to all Bible versions on this site
37
உடன்படிக்கைப்பெட்டி
1 அதன்பின் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது. 2 அதை உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தை அமைத்தான். 3 அவன் அதற்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, ஒரு பக்கத்திற்கு இரண்டு வளையங்களும், மற்றப் பக்கத்துக்கு இரண்டு வளையங்களுமாக அதன் நான்கு கால்களிலும் இணைத்தான். 4 சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினான். 5 பெட்டியைச் சுமப்பதற்கு அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் கம்புகளை மாட்டிவைத்தான்.

6 அவன் கிருபாசனத்தை சுத்தத் தங்கத்தினால் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது. 7 கிருபாசனத்தின் முனைகளிலும், அடித்துச் செய்யப்பட்ட தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்தான். 8 ஒரு பக்கத்தில் ஒரு கேருபீனையும், மறுபக்கத்தில் இன்னொரு கேருபீனையும் செய்தான். அவைகள் கிருபாசனத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரே தகடாக இருக்கும்படிச் செய்தான். 9 அந்தக் கேருபீன்கள் தங்கள் சிறகுகளை மேல்நோக்கி விரித்து, அவற்றால் கிருபாசனத்தை மூடிக்கொண்டு நின்றன. அவை ஒன்றுக்கொன்று எதிராக நின்று கிருபாசனத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டு நின்றன.

மேஜை
10 அவர்கள் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்தார்கள். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருந்தது. 11 பின்பு அவர்கள் அதைச் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள். 12 அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள். 13 பின்பு மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை அதன் கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்தினார்கள். 14 மேஜையைத் தூக்கும் கம்புகளை மாட்டுவதற்காகவே இந்த வளையங்கள் மேஜையின் சட்டத்திற்கு அருகே இருந்தன. 15 மேஜையைச் சுமப்பதற்கான கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள். 16 மேஜையில் இருக்கும் பாத்திரங்களான தட்டங்கள், தட்டுகள், கிண்ணங்கள், பானகாணிக்கைகள் வார்ப்பதற்கான ஜாடிகள் ஆகியவற்றைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள்.
குத்துவிளக்கு
17 சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்தார்கள். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே அவர்கள் செய்தார்கள். 18 குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக ஆறு கிளைகள் பிரிந்து சென்றன. 19 அதன் ஒரு கிளையின் மேல் வாதுமை வடிவமான மூன்று கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் இருந்தன. மற்றக் கிளையின் மேலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. அவ்விதமாகவே குத்துவிளக்கிலிருந்து பிரிந்து செல்லுகிற அதன் ஆறுகிளைகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. 20 குத்துவிளக்கின் மேல் உச்சியில் வாதுமைப் பூ வடிவமான நான்கு கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன. 21 குத்துவிளக்கிலிருந்து விரிகின்ற முதலாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டும் இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டும், மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டுமாக அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு எல்லாமுமாக ஆறு கிளைகள் இருந்தன. 22 மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் ஒரே சுத்தத் தங்கத்தகட்டால் அடித்துச் செய்யப்பட்டிருந்தன.

23 அதன் ஏழு அகல் விளக்குகளையும், அதன் விளக்குத்திரி கத்தரிகளையும், அவற்றை வைப்பதற்கான தட்டங்களையும் சுத்த தங்கத்தினால் செய்தார்கள். 24 குத்துவிளக்கையும் அதற்கான எல்லா உபகரணங்களையும் ஒரு தாலந்து எடையுள்ள சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள்.

தூபபீடம்
25 அவர்கள் தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்தார்கள். அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருந்தது. அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் செய்யப்பட்டிருந்தன. 26 மேஜையின் மேல்பகுதியையும், அதன் எல்லா பகுதியையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்கப்பட்டியை அமைத்தார்கள். 27 தூபபீடத்தைச் சுமப்பதற்கான கம்புகளை மாட்டுவதற்காக தங்கப்பட்டிக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டிரண்டு தங்க வளையங்களை அமைத்தார்கள். 28 அக்கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள்.

29 அவர்கள் பரிசுத்த அபிஷேக எண்ணெயையும், சுத்தமான நறுமணத்தூளையும் வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல் செய்தார்கள்.

<- யாத்திராகமம் 36யாத்திராகமம் 38 ->