12 “முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து கம்பங்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும். 13 சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். 14 வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும். 15 வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றிற்கும் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
16 “முற்றத்தின் நுழைவு வாசலுக்கு இருபது முழம் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு சித்திரத்தையற்காரனின் வேலையாய் அது செய்யப்படவேண்டும். நான்கு கம்பங்களும், நான்கு அடித்தளங்களும் அதற்கு இருக்கவேண்டும். 17 முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள் எல்லாம் வெள்ளிப் பூண்களும், கொக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையதாய் இருக்கவேண்டும். 18 முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும். 19 இறைசமுகக் கூடாரத்திற்கான முளைகளும், முற்றத்திற்கான முளைகளும், எல்லா உபயோகத்திற்காகவும் அங்கு பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் வெண்கலத்தினாலேயே செய்யப்படவேண்டும்.