Link to home pageLanguagesLink to all Bible versions on this site
20
பத்துக் கட்டளைகள்
1 இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்:
 
2 “அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
 
3 “நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே.
4 நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே. 5 நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். 6 ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன்.
7 உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை.
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். 9 ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். 10 ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. 11 ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12 உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.
13 கொலைசெய்ய வேண்டாம்.
14 விபசாரம் செய்யவேண்டாம்.
15 களவு செய்யவேண்டாம்.
16 உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
17 உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.”
 
18 மக்கள் இடிமுழக்கத்தையும், மின்னலையும் கண்டு, எக்காள சத்தத்தையும் கேட்டு, மலை புகையால் சூழப்பட்டதைக் கண்டபோது பயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தூரத்திலே நின்று, 19 மோசேயிடம், “நீரே எங்களுடன் பேசும்; நாங்கள் கேட்போம். இறைவனை எங்களுடன் பேச விடவேண்டாம். இல்லையெனில் நாங்கள் சாவோம்” என்றார்கள்.

20 அப்பொழுது மோசே மக்களிடம், “பயப்படவேண்டாம். பாவம் செய்வதிலிருந்து உங்களை விலக்கிக் காக்கும்படி, இறைவனைப்பற்றிய பயம் உங்களோடிருக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் உங்களைப் சோதிக்க வந்திருக்கிறார்” என்றான்.

21 இறைவன் இருந்த காரிருளை நோக்கி மோசே போகையில், மக்கள் தூரத்திலே நின்றார்கள்.

விக்கிரகங்களும் பலிபீடங்களும்
22 அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது இதுவே: ‘நான் வானத்திலிருந்து உங்களோடு பேசியதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள். 23 ஆகவே என்னோடு சேர்த்து வழிபடும்படி வேறொரு தெய்வத்தையும் செய்யவேண்டாம். வெள்ளியினால் தெய்வங்களையும், தங்கத்தினால் தெய்வங்களையும் உங்களுக்காக செய்யவேண்டாம்.

24 “ ‘எனக்காக மண்ணினாலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் எனக்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், மாடுகளையும் தகன காணிக்கையாகவும், சமாதான காணிக்கையாகவும்*சமாதான காணிக்கையாகவும் அல்லது ஐக்கிய காணிக்கை. இதின் நோக்கம் வேறொருவருடன் சமாதானம் அல்லது கூட்டுறவை மீட்டெடுப்பதாகும். பலி செலுத்துங்கள். எங்கெல்லாம் என் பெயரை கனமடையும்படி நான் செய்கிறேனோ, அங்கெல்லாம் நான் உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 எனக்குக் கல்லினால் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டுமானால், அதை வெட்டப்பட்ட கற்களினால் கட்டவேண்டாம். ஏனெனில் அதன்மேல் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதைக் கறைப்படுத்துவீர்கள். 26 உங்கள் நிர்வாணம் காணப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்திற்கு படிகளில் ஏறிப்போகவேண்டாம்’ என்றார்.

<- யாத்திராகமம் 19யாத்திராகமம் 21 ->