Link to home pageLanguagesLink to all Bible versions on this site
8
யூதர்களுக்குச் சார்பான அரசனின் கட்டளை
1 அந்த நாளிலேயே அகாஸ்வேரு அரசன் யூதர்களின் எதிரியான ஆமானின் சொத்தை எஸ்தர் அரசிக்குக் கொடுத்தான். மொர்தெகாயும் அரசனின் முன்னிலையில் வந்தான். ஏனெனில் அவன் தனது உறவினன் என்று எஸ்தர் அரசனுக்குச் சொல்லியிருந்தாள். 2 அரசன் ஆமானிடமிருந்து தான் எடுத்த, தனது முத்திரை மோதிரத்தை மொர்தெகாய்க்குக் கொடுத்தான். ஆமானின் சொத்துக்குப் பொறுப்பாக எஸ்தர் மொர்தெகாயை நியமித்தாள்.

3 எஸ்தர் திரும்பவும் அரசனின் காலில் விழுந்து அழுது மன்றாடினாள், யூதருக்கு எதிராக ஆகாகியனான ஆமான் திட்டமிட்டிருந்த கொடிய திட்டத்திற்கு ஒரு முடிவு கொண்டுவரும்படி அவனை கெஞ்சி வேண்டினாள். 4 அப்பொழுது அரசன் எஸ்தரிடம் தங்கச் செங்கோலை நீட்டினான்; அவள் எழுந்து அரசனுக்கு முன் நின்றாள்.

5 அவள், “அரசனுக்கு என்மேல் விருப்பமிருந்தால், நான் சொல்லப்போவது பிரியமாயிருந்தால், இதுவே செய்யத்தக்கது என அவர் நினைத்தால் அவர் எனக்குத் தயவு காண்பிப்பாராக. ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமான், அரசர் தம்முடைய எல்லா மாகாணங்களிலுமுள்ள யூதர்களை அழிப்பதற்குத் திட்டமிட்டு எழுதிய கடிதங்களை ரத்துச் செய்து, உத்தரவு ஒன்றை எழுதுவாராக. 6 எனது மக்கள்மேல் பேரழிவு வருவதைக் கண்டு என்னால் எப்படி அதைத் தாங்கமுடியும். எனது குடும்பத்தின் அழிவைக் கண்டு அதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்” என்றாள்.

7 அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடமும், யூதனான மொர்தெகாயிடமும், “யூதர்களை ஆமான் தாக்கியதினால் அவனுடைய சொத்தை நான் எஸ்தருக்குக் கொடுத்தேன். ஆமானையும் தூக்கு மரத்தில் தூக்கிலிட்டார்கள். 8 இப்பொழுதும் உங்களுக்கு நலமாய்க் காண்கிறபடியே யூதர்களின் சார்பாக அரசனின் பெயரால் இன்னொரு கட்டளையை எழுதி, அரசனின் மோதிரத்தினால் அதை முத்திரையிடுங்கள். ஏனெனில் அரசனின் பெயரால் எழுதப்பட்டு, அவருடைய மோதிரத்தால் முத்திரையிடப்பட்ட எந்த ஆவணமும் ரத்துச் செய்யப்பட முடியாது” என்றான்.

9 உடனடியாக மூன்றாம் மாதமாகிய சீவான் மாதம் இருபத்தி மூன்றாம் நாளிலே அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யூதர்களுக்கும், அரச பிரதிநிதிகளுக்கும், ஆளுநர்களுக்கும், இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை[a] பரந்திருந்த நூற்று இருபத்தேழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மொர்தெகாயின் உத்தரவுகளையெல்லாம் எழுதினார்கள். இந்த உத்தரவுகள் ஒவ்வொரு நாடுகளின் எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும் எழுதப்பட்டன. அத்துடன் யூதர்களுக்கும் அவர்களுடைய சொந்த எழுத்திலும், மொழியிலும் எழுதப்பட்டன. 10 மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் பெயரால் எழுதி அந்தக் கடிதங்களை அரசனின் மோதிரத்தினால் முத்திரையிட்டு, குதிரையில் செல்லும் தூதுவர் மூலமாய் அனுப்பினான். அவர்கள் அரசனுக்கென வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாய்ப் போனார்கள்.

11 அரசனின் கட்டளை, எல்லாப் பட்டணங்களிலுமிருந்த யூதர்கள் ஒன்றாய்க் கூடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை வழங்கியது. அவர்களையும், அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையாவது, மாகாணத்தையாவது சேர்ந்த எந்தவொரு ஆயுதம் தாங்கிய படையையும், அழிக்கவும், கொல்லவும், நாசப்படுத்தவும் உரிமை வழங்கியது. அத்துடன் தங்கள் பகைவரின் சொத்தைக் கொள்ளையிடவும் உரிமை வழங்கியது. 12 அகாஸ்வேரு அரசனின் எல்லா மாகாணங்களிலும் யூதர்கள் இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாள், ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளாயிருந்தது. 13 அந்த கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்படும்படி திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நாளில் தங்களுடைய பகைவர்களுக்கும் பதில் செய்ய யூதர்கள் ஆயத்தமாயிருக்கும்படி எல்லா நாட்டையும் சேர்ந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

14 அரச குதிரைகளின்மேல் போய்க்கொண்டிருந்த தூதுவர்கள் அரசனின் கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் விரைந்து சென்றார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலும் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது.

யூதர்களின் வெற்றி
15 மொர்தெகாய் நீலமும், வெள்ளையுமான அரச உடைகளை உடுத்திக்கொண்டு, பெரிய தங்க மகுடத்தையும், ஊதாநிற மென்பட்டு உடையையும் அணிந்து, அரசனின் முன்னிலையிலிருந்து புறப்பட்டான். சூசான் நகரம் மகிழ்ச்சியின் விழாக்கோலம் கொண்டிருந்தது. 16 ஏனெனில், யூதர்களுக்கு அது மகிழ்ச்சியும், சந்தோஷமும், குதூகலமும், மதிப்பும் நிறைந்த ஒரு காலமாயிருந்தது. 17 அரசனுடைய கட்டளைப்போன ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு பட்டணத்திலும் உள்ள யூதர்கள் மத்தியில் சந்தோஷமும், குதூகலமும் காணப்பட்டன. அவர்கள் விருந்துண்டு அதைக் கொண்டாடினார்கள். யூதர்களைப் பற்றிய பயம் பிற நாட்டு மக்களுக்கு இருந்ததால், அவர்களில் அநேகர் யூதரானார்கள்.

<- எஸ்தர் 7எஸ்தர் 9 ->