14 கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். 15 கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். 16 சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். 17 இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். 18 ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
19 ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள். 20 நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள். 21 கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது. 22 நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.
<- எபேசியர் 1எபேசியர் 3 ->